கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் அடிப்படையில், யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர் சிற்றூந்தில் பயணித்த போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து வாள், ஐயாயிரம் வரையான போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பயணித்த சிற்றூந்து போலி இலக்க தகடு கொண்டது என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு வாகன உதவி புரிந்தார் என்ற அடிப்படையில் கைதான குறித்த நபருக்கு யாழ்ப்பாணத்தில் இயங்கும் குற்றக் குழுக்களுடன் தொடர்புள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் கொழும்பு விசேட காவல்துறை குழுவினரிடம் ஒப்படைக்கவுள்ளார்.
இதேவேளை கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் யாழில் கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பிலிருந்து வந்த விசேட காவல்துறை குழுவால் மேலதிக விசாரணைக்காகக் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments