Friday, January 23, 2026
Huisதாயகம்வடக்கின் கல்வி ஊழல்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய ஆளுநர்..!

வடக்கின் கல்வி ஊழல்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய ஆளுநர்..!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல விசாரணைகள் இன்னும் முடிவுறுத்தப்படவில்லை. தங்களுக்கு வேண்டப்படாதவர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதமாகவும், வேண்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து விசாரணைகளையும் 6 மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் பணிப்புரை வழங்கினார்.


வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பான மாதாந்திரக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று (11.11.2025) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதில் கல்வித் திணைக்களம், விளையாட்டுத் திணைக்களம் மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டன. கல்வித் திணைக்களத்தின் கீழ் பல்வேறு நிதி மூலங்களிலிருந்து முன்னெடுக்கப்படும் திட்டங்கள் ஒவ்வொரு வலய ரீதியாக மதிப்பாய்வு செய்யப்பட்டன.

சில ஒப்பந்தகாரர்கள் காட்டும் அலட்சியமான பணிச்செயல்முறை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஒப்பந்தகாரர்களின் பணிகளை மதிப்பீடு செய்து அவற்றை பகிரங்கப்படுத்தி, எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள் முன்வைப்பது பற்றியும் ஆராயப்பட்டது.

திட்டங்கள் முடிவடைந்த பின்னரும் ஒப்பந்தகாரர்கள் சிட்டைகளை வழங்காமல் கொடுப்பனவுகளை தாமதப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


திணைக்கள ரீதியான மீளாய்வுக்குப் பின், வடக்கு மாகாணத்தின் சில பிரதேசங்கள் ‘கஷ்டப் பிரதேசம்’ அல்லது ‘அதிகஷ்டப் பிரதேசம்’ வகைப்படுத்திலிருந்து நீக்கப்பட்டமை குறித்து கலந்துரையாடப்பட்டது. அவை மீளவும் நடைமுறைப் படுத்தப்படுவதற்கான நியாயப்பாடுகளுடன் கோரிக்கை முன்வைக்குமாறு ஆளுநர் பணிப்புரையிட்டார்.

மேலும், கடல் கடந்த தீவுகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கைக்கு இணங்க ஆபத்துக் கொடுப்பனவை வழங்க துரிதமான நடவடிக்கைகள் எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

பாடசாலைகளில் பல்வேறு காரணங்களின் பெயரில் மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். அத்தகைய அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், ஆசிரியர்கள் கற்றல் பணிகளை மாணவர்களுக்கு வழங்கிவிட்டு தங்களது கைப்பேசிகளில் காணொளிகள் பார்ப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.


இதனைத் தடுக்கும் பொருட்டு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தாங்களும், தங்கள் கீழ் பணிபுரியும் அதிகாரிகளும் திடீர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி, திட்டமிடல், பொறியியல்), கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்கள், மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி இணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!