Wednesday, November 19, 2025
Huisதாயகம்நாம் அடிமையாக வாயை மூடி இருக்கத் தயாரில்லை - ஜோசப் ஸ்டாலின்

நாம் அடிமையாக வாயை மூடி இருக்கத் தயாரில்லை – ஜோசப் ஸ்டாலின்

அரசாங்கம் சொல்வது போல் 2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டம் மற்றும் கல்வி சீர்திருத்தம் என்பன தற்போதைய காலகட்டத்தில் மிக முக்கியமானவை. வரவு செலவு திட்டத்தை எடுத்துக் கொண்டால் அதிபர், ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்தோம். 1997ஆம் ஆண்டில் இருந்து சம்பள முரண்பாடு உள்ளது. அதற்காக நாம் பல போராட்டங்களை செய்தோம்.


அந்த போராட்டத்தின் விளைவாக தான் சுபோதினி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. அந்த குழு சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு யோசனை முன்வைத்தது. அதற்கு அமைவாக அதில் மூன்றில் ஒரு பகுதியை கொடுப்பதாக அப்போதைய அரசாங்கம் தீர்மானித்து 2022 ஆம் ஆண்டு இது வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு கட்டத்தை பெறுவதற்காக 2024 இல் பல போராட்டங்களை முன்னெடுத்தோம்.

அந்தப் போராட்டத்தில் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் உட்பட அதிபர் ஆசிரியர்கள் 23 பேர் உள்ளனர். அவர்களும் இணைந்து போராடினார்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் முன்னாள் பெரிய போராட்டம் செய்தோம். அந்த போராட்டத்தில் தலைமையில் இருந்தவர்கள் தான் தற்போது அரசாங்கத்தில் உள்ளனர்.


மூன்றில் இரண்டு சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிபர் ஆசிரியர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்களுக்கு 2027 வரை சம்பள அதிகரிப்பை வழங்கியுள்ளோம். அதற்காக 33 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ஆகவே 2027 வரை சம்பளத்தைப் பற்றியோ சம்பள முரண்பாடு பற்றியோ பேச முடியாது. அரசாங்கம் சொல்வது போல் 2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை. சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டும். ரணில் அரசாங்கம் கட்டம் கட்டமாக தருவதாக கூறிய போதும் நாம் போராடினோம்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் அது பற்றி வாய் திறக்கவில்லை. எனவே நாம் சம்பள அதிகரிப்புக்காக போராட வேண்டும். எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!