Wednesday, December 3, 2025
Huisகட்டுரைகள்ஈழத் தமிழர் வரலாறு - ஒரு உணர்வுப் பயணம்..!

ஈழத் தமிழர் வரலாறு – ஒரு உணர்வுப் பயணம்..!

ஈழத் தமிழர் இந்நிலத்தில் வாழ்ந்த வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஒன்றாகும். பண்டுகாபயனின் வரலாறு தொடங்கி பண்டைய சங்க இலக்கியங்கள், சீனப் பயணிகளின் குறிப்புகள் வரை சகலதிலும் தமிழர்கள் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் தம் அரசுகளை நிறுவி வணிகம், கல்வி, கலாசாரம் ஆகியவற்றை நிலை நிறுத்தியிருந்தனர் எனக் கூறப்படுகின்றது. ஏன் பண்டுகாபயனே ஒரு இந்து மன்னன் என்பதற்கு பல ஆதாரங்கள் மகாவம்சத்திலேயே உள்ளது.

மொழி என்பது ஒரு உயிரின் மூச்சு என்றால், ஈழத் தமிழர் அந்த மூச்சினைப் பாதுகாத்தவர். ஈழத்தில் மாறும் அரசியல் சூழல்கள் இருந்த போதிலும் தமிழ் கல்வி, கோவில் மரபுகள், திருவிழாக்கள், சைவத் தத்துவம் அனைத்தும் அந்த அடையாளத்தைத் தொடர்ந்து பேணி வளர்த்தன.

16ம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆட்சிகள் இலங்கைத் தீவினுள் நுழைந்த போது, அவர்கள் கொண்டு வந்த நிர்வாக மாற்றங்கள் தீவின் இனவியல்–அரசியல் உறவுகளை மாற்ற ஆரம்பித்தன.

போர்த்துகீசர், டச்சர், பிரிட்டிஷ் ஆட்சி – ஒவ்வொருவரும் தீவில் வேறு விதமான மாற்றங்களை உண்டாக்கின. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கல்வி வாய்ப்புகள் தமிழ் சமூகத்துக்கு திறக்கப்பட்டாலும், அதே நேரத்தில் தீவின் மக்கள் இடையே அரசியல் பிரிவுகளும் வலுப்பட்டன. இவை எல்லாம் பின்னாளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான அரசியல் நிலைமைகளை உருவாக்கின.

1948-ல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், தீவின் அரசியல் திசை மாற்றம் மிகத் தெளிவாகக் காணப்பட்டன. “ஒரு நாடு – ஒரு மொழி” என்ற இனவாத கோசத்துடன் வந்த சட்ட மாற்றங்கள், புறக்கணிப்புக்கள் தமிழ் மொழி மக்களிடம் ஆழமான கவலையையும் பாதுகாப்பு மீதான நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தின.

கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாகம் போன்ற துறைகளில் ஏற்பட்ட சமமின்மை, பாகுபாடு, புறக்கணிப்பு என்பன தமிழரின் அன்றாட வாழ்வியலைப் பாதித்தது.

இந்த காலத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் அமைதியான ஜனநாயக வழியில் உரிமைகளை கேட்டனர். அவர்களின் கோரிக்கை எதுவும் தனி மேலாதிக்கத்திற்காக அல்ல; மொழி, கல்வி, நிலம், கலாசாரம் ஆகிய உரிமைகளில் சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்காக மட்டுமே. எனினும் வழங்கப்படவில்லை. புறக்கணிப்புக்கள் தொடர்ந்தன.

சரித்திரத்தின் ஒரு கட்டத்தில், அரசியல் பேச்சுவார்த்தைகள் முடக்க நிலையை அடைய தீவில் ஆயுத மோதல்கள் தீவிரமான பாதையில் சென்றன. இந்த காலம் இரு பக்க மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தியது.

வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்கள் தமது வீட்டை, நிலத்தை, வாழ்வாதாரத்தை, உறவுகளை இழந்தனர். மக்கள் இடம்பெயர்ந்தனர். தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையை சிதைந்து போவதைக் கண்டனர்.

இந்த அனுபவம் ஈழத் தமிழர் மனதில் ஆழமான காயங்களை விட்டுச் சென்றது, ஆனால் அவர்களின் இடறாத மன உறுதியை வலுப்படுத்தியது.

போர் 2009-ல் போர் பாரிய மனித அவலத்துடன் நிறைவு பெற்ற பின்னர், ஈழத் தமிழர் வரலாறு புதிய கட்டத்திற்குள் நுழைந்தது. அவர்கள் சந்தித்தது ஒரு இரத்த இழப்பின் வடு அல்ல மாறாக அது மறுபிறப்பின் தொடக்கம். இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீள் குடியேறி தமது வாழ்வியலை கட்டமைக்கத் தொடங்கினர்.

இன்று வடக்கிலும் கிழக்கிலும் இளைஞர்கள் புதிய வாய்ப்புகளைக் கட்டியெழுப்புகின்றனர். கல்வி, தொழில்நுட்பம், கலை, விவசாயம், கடல்சார் தொழில்கள் போன்றவற்றில் முன்னேறுகின்றனர். அவர்கள் சுமந்து கொண்டிருப்பது கடந்த கால வலியை மட்டுமல்ல; எதிர்காலத்தின் கனவுகளையும் தான்.

இன்று உலகம் கிராமமாக மாற்றமடைந்து வருகின்றது. ஈழத் தமிழர்களின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது. இன்றைய ஜனநாயகப் போராட்டம் வன்முறைக்கானது அல்ல மாறாக உரிமை, சமத்துவக் குரலுக்காக, எமது உரிமை, அடையாளம், கலாசாரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக மட்டுமே.

எனவே, எம் தாயகத்தையும், எம் மொழியையும் எம் அடையாளத்தையும் பாதுகாத்து கெளரவமான எதிர்காலத்தை எமது அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க இன்றைய நாளில் உறுதியேற்போம்.

என்றும்,
பிரசாந்த்

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!