Friday, January 23, 2026
HuisBreakingவவுனியா வடக்கின் கல்வி வீழ்ச்சியும் கல்வி அதிகாரிகளின் அசமந்தமும்..!

வவுனியா வடக்கின் கல்வி வீழ்ச்சியும் கல்வி அதிகாரிகளின் அசமந்தமும்..!

ட மாகாணத்தின் முக்கிய கல்வி நிர்வாக வலயங்களில் ஒன்றாகிய வவுனியா வடக்கு, போர் பிந்தைய காலத்தில் பல துறைகளில் மாற்றங்களை அனுபவித்து வருகிறது. உட்கட்டமைப்பு, பொருளாதாரம், குடியேற்றம், அரசியல் ஆகிய துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இணையாக, கல்வித் துறையும் பல சவால்களைச் சந்தித்து வருகிறது.

அண்மைக் காலத்தில்,

  1. மாணவர்களின் கல்விப் பெறுபேறுகள் வீழ்ச்சி
  2. இடை விலகல் (dropout) அதிகரிப்பு
  3. ஆசிரியர்களின் மனஅழுத்தம்
  4. பெற்றோர்களின் நம்பிக்கையின்மை

என வவுனியா வடக்கின் கல்வி நிலை குறித்து பல பரிமாணங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. இந்தப் பின்னணியில் “கல்வி அதிகாரிகளின் அசமந்தம்” தொடர்பில் சமூகத்தில் பல விமர்சனக் குரல்கள் உருவாகியுள்ளன.

இந்த ஆய்வின் ஊடாக,

1. வவுனியா வடக்கின் கல்வி நிலையைச் சுருக்கமாக விளக்குதல்
2. கல்வி வீழ்ச்சியின் முக்கிய வடிவங்களையும் காரணிகளையும் ஆய்வு செய்தல்
3. கல்வி அதிகாரிகளின் பங்கு, பொறுப்பு, அசமந்தம் ஆகியவற்றை ஆராய்தல்
4. சாத்தியமான மாற்றுத் தீர்வுகளை முன்வைத்தல்
எனும் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு வடிவில் அமைந்துள்ளது. இவ்வாய்வு, சமூக அனுபவங்கள், பொதுவான கண்காணிப்புகள், கல்விச் செயற்பாடுகள் பற்றிய விடயங்களை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு என்பதையும் ஆரம்பத்திலேயே குறிப்பிட வேண்டும்.

வவுனியா வடக்கின் கல்வி அமைப்பு – ஒரு சுருக்கப் பின்னணி

வவுனியா வடக்கு பகுதி பெரும்பாலும் கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட களமாகும். பல வருடங்கள் நீடித்த உள்நாட்டுப் போர், இடம்பெயர்வு, முகாம்கள், மீளக்குடியேற்றம் ஆகியவையால் இப்பகுதி மக்களின் வாழ்க்கை அமைப்பும் கல்வி முன்னேற்றமும் பாதிக்கப்பட்டுள்ளன.

போருக்குப் பிந்திய காலத்தில்,

புதிய பாடசாலைக் கட்டிடங்கள்
பாடசாலை உபகரணங்கள்
ஆசிரியர் நியமனங்கள்
போன்றவை ஓரளவு முன்னெடுக்கப்பட்டாலும், கல்வியின் உண்மையான தரம் உயர்ந்ததா என்ற கேள்வி இன்னும் வினாவாகவே நிலைத்திருக்கிறது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில்,

சிறிய அளவிலான ஆரம்ப பாடசாலைகள்,
குறைந்த வசதியுள்ள இடைநிலைப் பாடசாலைகள்,
சில உயர்நிலை கல்லூரிகள்
எனப் பன்முகப் பாடசாலைகள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் அதே தரத்தில் செயல்படுகின்றனவா என்பது சந்தேகமே. இந்த தர வேறுபாடு மற்றும் திணைக்களத் திட்டமிடலின் பலவீனங்களுமே கல்வி வீழ்ச்சிக்கான அடிப்படை காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

வவுனியா வடக்கில் கல்வி வீழ்ச்சி பல தளங்களில் வெளிப்படுகிறது அந்த வகையில்,

தேர்ச்சி வீத வீழ்ச்சி

புலமைப்பரிசில், சாதாரண தர, உயர் தர பரீட்சைகளில் தேசிய சராசரியை விட குறைந்த தேர்ச்சி விகிதம். குறிப்பாக கணிதம், விஞ்ஞானம் போன்ற முக்கியப் பாடங்களில் அதிக அளவில் சித்தியின்மை. பல பாடசாலைகளில் உயர்தர மாணவர்கள் கூட குறைந்த பெறுபேறுகளுடன் மட்டும் தேர்ச்சி பெறுதல்.

வருகை வீழ்ச்சி

பாடசாலை வருகையானது இடைநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் குறைவாகக் காணப்படுகின்றது.

அடிப்படைத் திறன்கள குறைவு

முன் கல்வியை வெற்றிகரமாக முடித்தும், சரளமாக வாசிக்க இயலாமை, தங்களின் எண்ணங்களை தெளிவாக எழுத இயலாமை, எளிய கணக்கீடுகளுக்கே சிக்கல் அனுபவிப்பது.

மாணவர்–ஆசிரியர் உறவின் தரம் குறைவு

பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, ஊக்கம் ஆகியவை குறைந்து, “பாடசாலையில் படிப்பது பயனற்றது” என்ற கருத்து சில மாணவரிடம் உருவாகுதல். போன்ற எல்லா வெளிப்பாடுகளும் இணைந்து, வவுனியா வடக்கில் கல்வி வீழ்ச்சி காணப்படுகின்றது. இது ஒரு தனிநபர் மட்டப் பிரச்சினை அல்ல; அமைப்பு மட்டப் பிரச்சினை என்பதையே ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

இங்கு கல்வி அதிகாரிகள் என்பவர்கள் யார்?

  1. மாகாண கல்வி அமைச்சு / மாகாண கல்வி செயலாளர்
  2. மாகாண கல்வித் திணைக்களம்/ மாகாண கல்விப் பணிப்பாளர்
  3. வலயக் கல்வி அலுவலகம்/ வலயக் கல்விப் பணிப்பாளர்
  4. கோட்டக் கல்வி அலுவலகம் / கோட்டக் கல்வி அலுவலர்கள்
  5. பாடசாலைகள் அதிபர்கள் / ஆசிரியர்கள்
  6. உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் – பாடம்,
  7. ஆசிரிய ஆலோசகர்கள்/ பாட வளவாளர்கள் ஆகியோர் நிர்வாக வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாகும்.

அதிகாரிகளின் அடிப்படைப் பொறுப்புகள்

  1. கல்விக் கொள்கைகளை செயல்படுத்தல் – தேசிய மற்றும் மாகாண கல்விக் கொள்கைகளை பாடசாலைகளுக்கு கொண்டு சென்று, அவை நடைமுறையில் அமுல்படுகிறதா என உறுதிசெய்தல்.

2. ஆசிரியர் மற்றும் பாடசாலைக் கண்காணிப்பு – வகுப்பு கண்காணிப்பு, பாடத்திட்ட முன்னேற்றம், கற்பித்தல் தரம், பரீட்சை முறைகள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தல்.

3. திட்டமிடல் மற்றும் வளவளப் பகிர்வு – ஆசிரியர் நியமனங்கள், பயிற்சிகள், உபகரண விநியோகம், கட்டிடடங்கள் முதலியவற்றை திட்டமிட்டு ஒழுங்குபடுத்துதல்.

4. தர மேம்பாட்டு நடவடிக்கைகள் – குறைவான தேர்ச்சி வீதம் உள்ள பாடசாலைகளுக்கு சிறப்பு உதவி திட்டங்கள், பயிற்சிகள், மாணவர் ஆதரவு நிகழ்வுகள் ஆகியவற்றை முன்னெடுத்தல்.

இந்தப் பொறுப்புகள் சரியான முறையில் செயல் படுத்தப்படாமல் போகும் போது “அசமந்தம்” என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

வவுனியா வடக்கில் கல்வி அதிகாரிகளின் அசமந்தம் பற்றி கூறும் போது, அது பல வகைகளில் வெளிப்படுகிறது.

  1. சில பாடசாலைகளில், மாதங்கள் கடந்தும் கல்வி திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வை இன்றி இயங்கும் நிலை.

2. அறிக்கைகளில் பார்வை செய்யப்பட்டதாகக் காட்டப்பட்டாலும், உண்மையில் நேரடி வகுப்பு கண்காணிப்பு நடைபெறாத சூழ்நிலை.

3. உண்மையான பாட அடைவு, மாணவர் முன்னேற்றம், தனிநபர் வேறுபாடு போன்றவற்றை ஆராயாமல், “பரிந்துரை”, “குறிப்பு” என காகிதத்தில் மட்டும் செயல்கள் பூர்த்தி செய்யப்படுதல். அதனால், ஆசிரியர்கள் உண்மையிலேயே தரம் உயர்த்தப் போராட வேண்டிய அவசியத்தை உணராமல் போகிறார்கள்.

4. பரீட்சை முடிவுகள், வருகை விவரங்கள், இடை விலகல் பிரச்சினை உள்ள பாடசாலைகள் பற்றிய தரவு சேகரிப்பு தொடர்ந்து நடைபெறுகின்றது. ஆனால், “இந்தத் தரவின் அடிப்படையில் எத்தனை தர மேம்பாட்டுத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன?” என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை.

பொறுப்புக்கு பதில் காரணங் கூறுதல்

ஆசிரியர் பற்றாக்குறை, நிதி குறைவு, போக்குவரத்து சிரமம், பெற்றோர் ஒத்துழைப்பு இல்லாதது போன்றவற்றை முன்வைத்து, நிர்வாகத் தரப்பு தமது பொறுப்பைத் தட்டிப்போடும் மனப்போக்கு. சில சமயங்களில் நிர்வாக அழுத்தம், உள்நிலை முரண்பாடுகள் காரணமாக நீதி, சமநிலை ஆகியவை பாதிக்கப்படுவது தொடர்பிலும் சமூகத்தில் பேசப்படுகின்றன.

குறைந்த தேர்ச்சி வீதம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான விவாதங்கள், கூட்டங்கள், அறிக்கைகள், இடம்பெற்றாலும் 3–5 ஆண்டு காலப் பாடத்திட்டத்தை நோக்கிய மூலோபாயத் திட்டங்கள் (strategic plans) இல்லாமை. இதுவே சமூகத்தில் “கல்வி அதிகாரிகள் அசமந்தமாக இருக்கிறார்கள்; உண்மையான மாற்றத்துக்கு முன்வரவில்லை” என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.

கல்வி வீழ்ச்சியும் அதிகாரி அசமந்தமும்

கல்வி வீழ்ச்சி என்பது ஆசிரியர் மட்டத்தினரின் குறைபாடு மட்டும் அல்ல; அதில் திணைக்கள நிர்வாகத்தின் செயலின்மை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

ஒருவரும் தீவிரமாக கண்காணிக்காத இடத்தில், சில பாடசாலைளில் வகுப்பு ஒழுங்கு, பாட முன்னேற்றம், பரீட்சை தயாரிப்பு ஆகியவை தளர்வாக இருப்பது இயல்பாகிறது.

சில எளிதில் அதிகாரிகளால் அணுகக் கூடிய பாடசாலைகளுக்கு மட்டுமே வாய்ப்புகள், பயிற்சிகள், கூடுதல் உதவி வழங்கப்படுவதுடன் முரண்படும் பாடசாலைகள் புறக்கணிக்கப்படுதல்.

இடை விலகும் மாணவர்களை காப்பாற்ற வல்லுநர் ஆலோசனை, சமூகப் பணி, non-formal education திட்டங்கள் உருவாக்காத நிர்வாகம், பிரச்சினையை அதிகரிக்கச் செய்கின்றது.

ஆதாரம், உரிய முறைப்பாடு இல்லாமல், குற்றம் சுமத்தும், பழி சுமத்தும் முறையில் மட்டுமே கல்வி அதிகாரிகள் பாடசாலையை அணுகும் போது, விசுவாசமாகச் செயற்படும் ஆசிரியர்கள் உற்சாகம் இழக்கின்றனர். இது மாணவர்–ஆசிரியர் உறவையும் நேரடியாக பாதிக்கிறது.

இதனால், கல்வி வீழ்ச்சி மற்றும் கல்வி அதிகாரிகளின் அசமந்தம் ஆகியவை ஒரு நச்சு வட்டமாக செயற்படுகின்றன.

“வவுனியா வடக்கின் கல்வி வீழ்ச்சியை மீட்க, முக்கிய மாற்றமானது நிர்வாக மட்டத்தில் மேற்கொள்வதே அவசியமாகின்றது.”

அந்த வகையில்,

குடும்ப வறுமை
போருக்குப் பிந்திய மனநிலை
பெற்றோர்களின் கல்வி நிலை
சமகால ஊடகத் தாக்கம்
போன்ற காரணிகள் கல்வி வீழ்ச்சிக்கு காரணங்கள் தான். ஆனால், இத்தகைய சிக்கலான சூழலில் கூட, நன்கு திட்டமிடப்பட்ட நிர்வாகம், உறுதியான கல்விக் கொள்கை அமுலாக்கம், தொடர்ச்சியான கண்காணிப்பு இருந்தால், வீழ்ச்சியை பாரியளவு குறைக்க முடியும்.

இந்தப் பின்னணியில், கல்வி அதிகாரிகளின் அசமந்தம் என்பது,

செயற்பட முடியாத அசமந்தமா?
செயற்பட விரும்பாத அசமந்தமா?
என்ற இரு கோணங்களிலும் பார்க்க வேண்டியது அவசியமாகின்றது.

இந்த நிலையில் சில வலயங்களில்,

வாகன வசதி இன்மை,
நிதி குறைவு,
ஊழியர் பற்றாக்குறை
போன்ற காரணிகளால் அவர்கள் செயற்பாட்டில் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.

ஆனால், அது வவுனியா வடக்கு வலயத்திற்குப் பொருந்தாது. எனினும் அதனையே தமது வீழ்ச்சிக்கான காரணமாகக் கூறிக் கொள்வதே இங்கு பிரச்சினையின் மையமாகக் காணப்படுகின்றது.

மாற்றத்திற்கான சாத்திய வழிகள்

ஆண்டுக்கு ஒரு முறை மேற்பார்வை விழாவை விட, குறைந்த தேர்ச்சி வீதம், இடை விலகல், குறைந்த மாணவர் வருகை கொண்ட பாடசாலைகளுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பினை மேற்கொள்ளல்.

ஒவ்வொரு பாடசாலைக் கண்காணிப்புக்குப் பின்னர்,

  1. குறைபாட்டுப் பட்டியல்
  2. 6–12 மாத செயற் திட்டம்
  3. காலவரையறை மற்றும் பொறுப்பாளர்கள் ஆகியவை எழுத்து பூர்வமாகத் தயாரிக்கப்பட்டு, அதைப் பின்தொடர வேண்டும்.
  4. தேர்ச்சி வீதம், இடை விலகல், வருகை, ஆசிரியர் நியமனங்கள் போன்றவற்றை பெற்றோர்–சமூகத்திற்கு திறந்தவெளியில் பகிர்ந்து கொள்ளும் நிலையை உருவாக்குதல்.
  5. கல்வி அதிகாரிகள் தங்களை வெறும் கணக்கெடுப்பு மற்றும் மேய்க்கும் அதிகாரிகளாக அல்ல, “கல்வி மாற்றத் தலைவர்கள்” எனக் கருதி செயற்படக் கூடிய மனப்போக்கு உருவாக பயிற்சிகளில் ஈடுபடல்.
  6. “தண்டனை” மையமாக அல்ல; மாறாக “ஆதரவு, ஆலோசனை” மையமாக கண்காணிப்பு பணியை மாற்றுதல்.
  7. கல்வி அதிகாரிகளின் பதவி உயர்வு, ஊக்கம், மதிப்பீடு ஆகியவற்றை, அவர்களின் கல்வி வலயத்தில் ஏற்பட்ட கல்வித் தர முன்னேற்றத்துடன் தொடர்புபடுத்துதல்.
  8. கல்வி அதிகாரிகள் நேரடியாக கிராம மக்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டங்களை திட்டமிட்டு நடத்துதல்.
  9. பாடசாலை மேம்பாட்டுத் திட்டங்களை சமூகத்துடன் பகிர்ந்து கூட்டு பொறுப்பு உணர்வு ஏற்படுத்துதல்.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள தொழில்முனைவோர், அரசு பணியாளர்கள், வெளிநாட்டில் உள்ள ஊரார் ஆகியோரின் ஆதரவைக் கோருவதில் அதிகாரிகள் தூண்டுகோலாக செயல்படுதல்.

ஒவ்வொரு பாடசாலையிலும் இடை விலகும் மாணவரின் விவரம் உடனுக்குடன் கோட்டக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

அந்த மாணவரின் வீட்டுக்குச் சென்று அதிகாரிகள் – ஆசிரியர்கள் – சமூகப் பணியாளர்கள் இணைந்து காரணங்களை ஆய்வு செய்தல் வேண்டும்.

1. சாதாரண கலைத் திட்டத்தில் பொருந்தாத மாணவர்களுக்கு
2. தொழிற் பயிற்சிகளை வழங்குதல்
3. குறுகியகால நுண்திறன் பயிற்சி
4. காலை–மாலை வகுப்புகள்
போன்ற மாற்றுப் பாதைகள் உருவாக்கப்பட வேண்டும்.

வவுனியா வடக்கின் கல்வி வீழ்ச்சி என்பது, போர் பிந்தைய வறுமை, சமூக அமைப்பு சிதைவு, குடும்பப் பொருளாதார அழுத்தம் போன்ற பல காரணிகளின் சகலவித சிக்கல்களையும் தன்னகத்தே தாங்கியுள்ள ஒரு ஆழமான பிரச்சினை.

இச் சூழலில், கல்வி அதிகாரிகள் ஒரு முக்கிய தலையாய வட்டாரமாக இருக்கும் போதும், அவர்களின் அசமந்தம், செயல் பலவீனம், திட்டமிடல் குறைவு ஆகியவை பிரச்சினையை மேலும் கூர்மையாக்குகின்றன.

கல்வி வீழ்ச்சி மற்றும் இடை விலகல் பற்றி பேசும் போது,
ஆசிரியர்களையும்,
மாணவர்களையும்,
பெற்றோர்களையும் மட்டுமே குற்றம் கூறுவது போதுமானது அல்ல.
நிர்வாகமும் தன்னை நேர்மையாகப் பிரதிபலித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

“சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதே கல்வி நிர்வாகத்தின் உயிர்நாடி; அந்த முடிவு தாமதப்பட்டாலோ, தளர்த்தப்பட்டாலோ, ஒரு தலைமுறை முழுவதும் அதன் விலையை செலுத்த வேண்டியிருக்கும்.”

எனவே,

நிர்வாகத் துல்லியம்
விளைவு அடிப்படையிலான திட்டமிடல்
உண்மையான கண்காணிப்பு
சமூகப் பங்குபற்றல்
இவற்றை முன்னிறுத்தும் மாற்றம்தான் வவுனியா வடக்கின் கல்வி வீழ்ச்சியையும், கல்வி அதிகாரிகளின் அசமந்தத்தையும் மாற்றக்கூடிய வழி என்பதையும் வலியுறுத்துகிறது.

ய்வான்

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!