ஜப்பானைத் தாக்கிய 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியது. இந்த பேரழிவு முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி அவசரகால பணிக்குழுவை அமைத்துள்ளார்.
இடிந்து விழுந்த சாலைகள் முதல் சேதமடைந்த கட்டிடங்கள் வரை, ஜப்பானில் இருந்து அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் சானே தகைச்சி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அவசரகால பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“மக்களின் உயிர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம், அவர்களைக் காப்பாற்ற நாங்கள் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று அவர் கூறினார். இப்பகுதியில் உள்ள அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜப்பானின் ஹோன்ஷு தீவின் கரையோரத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 11:15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் ஜப்பானின் பெரும்பகுதி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால் கடலில் அலைகள் எழும்பின, மேலும் ஜப்பான் மற்றும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பிற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் 50 கி.மீ ஆழத்தில் இருந்தது.
ஜப்பானிய வானிலை ஆய்வு நிறுவனம், ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள உரகாவா நகரம் மற்றும் அமோரி மாகாணத்தில் உள்ள முட்சு ஒகவாரா துறைமுகத்தை 40 சென்டிமீட்டர் சுனாமி தாக்கியதாக தெரிவித்துள்ளது.


Recent Comments