மக்களின் பூர்வீக குளங்களை விடுவிக்க முடியாது என கூறும் வன வளத் திணைக்களம் வவுனியா வடக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பெரும் காடுகளை அழிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இதன் போது வன வளத் திணைக்களம் எல்லைப்படுத்தப்பட்ட செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முசல்குத்தி, நீலியாமோட்டைக்குளம், வேப்பங்குளம் போன்றவற்றை விவசாயத் தேவை கருதி விடுவிக்குமாறு கடந்த கூட்டத்தில் கோரப்பட்ட நிலையில் அவை வன ஒதுக்கீட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் விடுவிக்க முடியாது என இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், எந்தவித அனுமதியும் இல்லாமல் வவுனியா வடக்கில் பெரும் காடுகள் அழிக்கப்பட்டு ஒரு தரப்பால் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

வனவளத் திணைக்களம் மகாவலி போன்றன அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த பகுதியில் உருவாக்கப்படவுள்ள கிபிள் ஓயாத் திட்டம் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை.
அந்த திட்டத்தால் பாதிக்கப்படப் போவது அந்த பகுதியின் பூர்விக மக்கள், ஆனால் பயனடைபவர்கள் வேறு யாரோ. எனவே இனவாதத்தை நாங்கள் விரும்பவில்லை என கூறியுள்ளார். அதற்கான சூழலை நீங்களே ஏற்ப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு ஆதரவாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், து.ரவிகரன், றிசாட் பதியூதீன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், கருத்துக்களையும் முன்வைத்தனர்.
இது தொடர்பாக நீண்ட விவாதம் இடம்பெற்றதையடுத்து கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் உபாலி சமரசிங்க வவுனியா வடக்கில் நடைபெறும் விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் கோரியதுடன், கிபுள் ஓயாத் திட்டம் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தெளிவூட்டுவது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.


Recent Comments