அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில், தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மாறி மாறி வருகின்ற ஒவ்வொரு அரசாங்கங்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை வழங்க மறுப்பதாகவும், மனித உரிமைகளை மதிக்காமல் செயற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தமது கவலைகள் தொடர்பில் வெளிப்படுத்தி வரும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வட- கிழக்கின் பல பகுதிகளில் தொல்லியல் எனும் போர்வையில் காணி அபகரிப்புகள் இடம் பெறுவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
மனிதப் புதை குழிகள் விவகாரம் போன்றவற்றிலும் சர்வதேச தலையீட்டுடனான விசாரணை பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திலும் மனித உரிமை விடயங்களிலும் சர்வதேசத்தினுடைய மேற்பார்வையும் தலையீடும் வேண்டும் எனவும் இந்த மனித உரிமைகள் தினத்திலும் சர்வதேசத்திடம் தமது கோரிக்கைகளையும் முன் வைப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.


Recent Comments