கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைகளைக் கொட்டிய ஒருவரை, அதிவேக வீதிப் பொலிஸ் பிரிவின் சீதுவ துணைப் பரிபாலன நிலைய அதிகாரிகள் இன்று (10) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
குறித்த அதிவேக வீதியின் 19வது கிலோமீட்டர் மைல்கல் அருகே, கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கிச் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றின் சாரதி, குப்பை அடங்கிய ஒரு பையை அதிவேக வீதியில் எறிவதை அங்கு நடமாடும் சோதனையில் ஈடுபட்டிருந்த இருந்த அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த அதிகாரிகள் உடனடியாக சீதுவ துணைப் பரிபாலன நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள், அதிவேக வீதிச் சட்டத்தின் கீழ் வீதியில் குப்பைகளை வீசிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சாரதியைக் கைது செய்து, மேலதிக நடவடிக்கைக்காக சீதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைதானவர் யாழ், அல்வாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் நாளை (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


Recent Comments