மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள யோத வாவி நீரேந்துப் பகுதியில் அனுமதிக்கப்படாத காணி கையகப்படுத்துதலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக நேற்று (13) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முறையான ஆய்வை மேற்கொண்டதன் பின்னர் தொடர்ந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மன்னாரில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக கடற் தொழிலாளர் சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது சுமார் 12,000 கடற்றொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதன்போது தெரியவந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்படாது விட்டாலும், சீரற்ற வானிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் சமூகங்களுக்கு சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்காக சீன தூதரகத்துடன் கலந்துரையாடுவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
நீரேந்துப் பகுதியில் சட்டவிரோதமாக காணிகள் கையகப்படுத்தப்படுவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குளங்களின் எல்லைகளில் கற்களை இடுவதற்குத் தடையாக இருப்பவர்கள் மீது சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.


Recent Comments