கடந்த சில மாதங்களாக மன்னார் பொது வைத்திய சாலையினை மத்திய அரசின்கீழ் கொண்டு செல்ல சில வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுத்திருந்த நிலையில் இன்று (13.12) மன்னாரில் நடைபெற்ற விசேட மாவட்ட அபிவிருத்திக்கூட்டத்தின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது,
இன்றைய கூட்டத்தின் போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையினை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். இதற்கு சக பாராளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் அவர்கள்,
வடக்கு மாகாணசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளமையால் அதற்கு முன்பதாக வைத்திய சாலையை மத்திய அரசின்கீழ் கொண்டு வருமாறும், இல்லாது விட்டால் வடக்கு மாகாணசபை வந்து விட்டால் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சத்தியலிங்கம் அவர்களும் சேர்ந்து மத்திய அரசின் கீழ் கொண்டுவர விடமாட்டார்கள். அவர் இப்பொழுதே அதற்கு எதிர்ப்பாக உள்ளார் என தெரிவித்தார். இதன் போது ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் சிரித்தவாறே சத்தியலிங்கம் எம்.பியை நோக்கினர்.

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம்,
வைத்திய சாலை மாகாணத்திற்கு சொந்தமானதா மத்திக்கு சொந்தமானதா என்பதுவல்ல விடயம், மன்னார் பொது வைத்திய சாலையின் பிரதான பிரச்சினை வளப் பற்றாக்குறை. அதனை நிவர்த்தி செய்து தேவையான வளங்களை கொடுத்தால் வைத்தியசாலை திறம்பட இயங்கும். உதாரணமாக வைத்திய சாலையில் சி.ரி ஸ்கான் பிரிவிற்கான கட்டிடம் உள்ளது. ஆனால் அங்கு சி.ரி ஸ்கான் இயந்திரம் இல்லை.
இவ்விடயம் தொடர்பாக அன்மையில் பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சரை சந்தித்து சி.ரி ஸ்கேன் இயந்திரம் ஒன்றினை கோரியிருந்தேன். வரும் வருடத்திற்கான ஒதுக்கீட்டில் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு தேவைப்பாடுகள் நிறைய உள்ளது. அவற்றை பூரணப்படுத்தினாலே வைத்தியசாலை சிறப்பாக இயங்கும். ஆகவே அதனை செய்து தாருங்கள் என கோரினார்.
இதனையடுத்து பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், ஒரு வைத்திய சாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கென நடைமுறைகள் உள்ளது. அதனை பூர்த்தி செய்தே அவ்வாறு செய்யமுடியும். அத்தோடு வெறுமனே பெயர்ப் பலகையினை மாற்றுவதால் மாத்திரம் வைத்தியசாலை திறம்பட இயங்கிவிடப் போவதில்லை, தேவையான வளங்கள் பூரணப்படுத்தப்பட்டால் மாத்திரமே திறம்பட இயங்க முடியும்.
அந்தவகையில் வைத்தியசாலைக்கு தேவையான வளங்களை பூர்த்திசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்து குறித்த விடயத்திற்கு நிரந்தரமான முற்றுப் புள்ளி வைத்திருந்தார்.
இந்த வைத்தியசாலை விடயம் தொடர்பாக இதற்கு முன் இடம்பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டமொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் பங்கேற்காத நிலையில் மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் தீர்மானத்தினை நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்கள்,
வடக்கு மாகாண சபையின் 2015/01 ம் இலக்க சுகாதார நியதிச்சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய அனைத்து வைத்திய சாலைகளும் மாகாண சபையின் நிறுவனங்களாக வர்த்தமானியூடாக பிரகடனப்பட்டுள்ளது என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென்றார்.
ஊடகப்பிரிவு





Recent Comments