வவுனியா மாவட்டத்தின் பறங்கியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் வெளியேறுவதால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்பிலான விசேட கூட்டமொன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (29.12) ஈச்சங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
கமக்காரர் அமைப்புக்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் மழை நேரங்களில் பறங்கியாறு நீர்த் தேக்கத்தில் இருந்து வெளியேறும் மேலதிக நீர் அதன் கீழ் வரும் குளங்கள் மற்றும் வயல் நிலங்களில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது தொடர்பில் விவசாயிகள் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினருக்கு முறைப்பாடு தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து குறித்த பிரச்சினைக்கான தீர்வை காணும் வகையில் மேற்படி கலந்துரையாடல் உரிய தரப்பினரின் பங்கேற்புடன் பாராளுமன்ற உறுப்பினரால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

அதன்படி வெளியேறும் மேலதிக நீரை வயல்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் உதவியுடன் கால்வாய் ஒன்றினை அமைத்து வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறினை ஆராய்வதாகவும் திட்டமொன்றினை தயாரித்து அதனை செயற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் ஆற்றுநீர் திறந்துவிடப்படும் போதும் வெள்ள நீர் வெளியேறும் போதும் விவசாயிகள் போக்குவரத்து செய்ய முடியாத நிலைக்கு தீர்வாக தற்போதுள்ள பாதையில் மேம்பாலம் ஒன்றினை எதிர்வரும் வருட நிதியில் அமைக்கவும் தீர்மாணிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நீர்த்தேக்கம் அமைக்கும் போது மக்களிடம் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக மாற்றுக்காணிகள் வழங்கப்பட்ட போதும் 15 வருடங்கள் கடந்தும் அவற்றிற்கான காணி ஆவனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.
குறித்த விடயத்தினையும் உடனடியாக செய்து தருவாக அரசாங்க அதிபர் இதன் போது தெரிவித்தார்.

அத்துடன் குறித்த நீர்த்தேக்கத்திற்கு கீழான சுமார் 5கிலோ மீற்றர் நீளமான விவசாய வீதிகளையும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உதவியுடன் உடனடியாக புனரமைத்து தருவதாகவும் அரச அதிபர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இவற்றிற்கு மேலதிகமாக குறித்த பகுதிகளின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்கள் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்க அதிபர், பிரதேசசபை தவிசாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததுடன் அவற்றிற்கான தீர்வுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.


Recent Comments