சிறுமி டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தெரிவித்த வன்னிமா வட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மருத்துவர் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர் சிலரின் அசமந்த போக்கு மற்றும் முறையற்ற மருந்து வழங்கல் என்பன சிறுமியின் மரணத்திற்கு காரணமாக இருப்பின் உரியவர்கள் முறைப்படி தண்டிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி 29.12.2025 இன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்ககண்டாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனைகளிலேயே முல்லைத்தீவும் மன்னாரும் தான் மிகவும் பின்தங்கி இருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது மாவட்ட பொது மருத்துவமனையிலாவது சிறந்த மருத்துவ வசதி காணப்பட வேண்டும். ஆனால் முல்லைத்தீவும் மன்னாரும் இன்றுவரை ஏனைய மாவட்ட மருத்துவமனைகளுக்கு நிகராக இல்லை. வளங்களில் இன்னமும் சமத்துவமற்ற நிலையில் உள்ளன.
எங்களின் பிள்ளை டினோஜாவின் மரணம் ஏற்றுக்கொள்ள இயலாதது. மருத்துவமனைக்கு உள்ளும் புறமும் பலராலும் மருத்துவமனை மீதான முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. அதிக அளவாக மருந்து பிள்ளைக்கு வழங்கப்பட்டமையே மரணத்துக்கு காரணம் என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பிள்ளையின் மரணத்துக்கான நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மருத்துவர் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர் சிலரின் அசமந்த போக்கு, முறையற்ற மருந்து வழங்கல் காரணமாக இருந்தால் அவர்கள் முறைப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பிரச்சினை நிகழும் போது அது தொடர்பில் பணிப்பாளரோடு கதைக்க முனைந்தால் அவர் கொழும்பில் இருக்கிறார் என்ற தகவல் வருகிறது. மருத்துவர்கள் தொலைபேசி வழியில் மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள் என்ற முறைப்பாடு பல சந்தர்ப்பங்களில் கிடைக்கப் பெறுகின்றது.
இறுக்கமற்ற நிருவாக நடைமுறை மேற்படி மருத்துவமனையில் நிலவுவதாக உள்ளிருந்தும் சில முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. முன்னைய காலங்களில் இருந்த பணிப்பாளர்கள் மிகவும் பற்றுறுதியோடு பணிபுரிந்தனர்.
ஒரு மரணமேனும் நிகழ்ந்து விடக் கூடாது என இரவுபகலாக உழைத்தனர். இப்போதுள்ள நிருவாகம் அந்த இறுக்கமான நடைமுறைகளில் இருந்து விலகி விடுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

இங்கு கூடியிருக்கிற அவ்வளவு மக்களும் ஓரிருவர் தூண்டுதலால் வந்து சேர்ந்தவர்கள் அல்ல. ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் அசமந்தப் போக்கோடு மருத்துவ சேவை வழங்கப்படுவதில் அனுபவப்பட்டு இந்தப் பிள்ளையின் மரணத்திலும் அத்தகைய பிழை ஏற்பட்டிருக்கும் என ஆழமாக நம்புகிறார்கள்.
அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு நீதியான விசாரணை நடைபெற வழிவிட வேண்டும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உணவு ஒவ்வாமையால் ஒரு மரணம் சம்பவிக்கிறது என்பதை எங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வீட்டில் இருந்தும், விடுதியில் இருந்தும் தொலைபேசி வழியில் மருத்துவம் பார்ப்பது இங்கு அதிகரித்திருப்பதாக மக்கள் முறையிடுகின்றனர்.
தமது நோய் நிலைமைகளைக் குணப்படுத்த வேண்டுமென்ற நோக்குடனேயே வைத்தியசாலைக்கு மக்கள் வருகை தருகின்றார்களே தவிர, உயிரிழப்பதற்கு மக்கள் இங்கு வருகை தருவதில்லை.
ஆனால் இந்த மருத்துவமனையில் தொடர்சியாக இடம்பெற்றுவரும் இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மரணங்களால் மாஞ்சோலை வைத்தியசாலையை மரணச் சோலையை என மக்கள் கூறுகின்றனர்.
இந்த சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென உரிய தரப்பினரை வலியுறுத்துவேன். இந்த மரணத்திற்கு நீதிகோரி பாராளுமன்றிலும் எனது குரல் ஒலிக்கும்.
இந்த சந்தேகத்திற்கிடமான மரணத்துடன் தொடர்புடைய மருத்துவரைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாகவும் பலரும் எம்மிடம் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியசாலையில் இருப்பதில்லை என்ற முறைப்பாடுகளும் கிடைக்கின்றன. தமது வீடுகளில் இருந்து கொண்டு தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்ற வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் இங்கு இருக்கத் தேவையில்லை.
அசமந்தப்போக்கான வைத்தியசாலைச் செயற்பாடுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இந்த சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும் – என்றார்.


Recent Comments