Friday, January 23, 2026
Huisதாயகம்கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக - ரவிகரன் எம்.பி கோரிக்கை

கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக – ரவிகரன் எம்.பி கோரிக்கை

வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் கல்விசார் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதுடன், குறித்த கல்விசார் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவர்களிடம் கடிதமொன்றினைக் கையளித்துள்ளார்.

குறிப்பாக கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை, முற்றுப் பெறாத மற்றும் கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டுமானங்கள், இலக்கமுறை இடைவெளி மற்றும் தகவல் தொழில்நுட்ப நெருக்கடி, சுகாதார வசதிக் குறைவுகளால் பாடசாலைகளில் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள், கற்றல் பெறுபேறுகளிலுள்ள ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட மிகமுக்கியமான குறைபாடுகள் வன்னியில் காணப்படுவதாகவும் அக் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிட்டு உடனடியாகத் தீர்வை வழங்குமாறு கோரியே நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு பிரதமரிடம் கோரிக்கைக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 09.01.2025இன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இக்கடிதத்தைக் கையளித்துள்ளார்.

அந்த வகையில் வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் அவசர கல்விசார் குறைபாடுகள் தொடர்பில் உடனடித் தலையீடு கோருதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கல்வி மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நான் எழுப்பிய விடயங்களைத் தொடர்ந்து, வன்னி தேர்தல் மாவட்டம் எதிர்கொள்ளும் நீண்டகால மற்றும் முறைமைசார் சவால்களை மீண்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். எமது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் பாரதூரமான வளப் பற்றாக்குறைகள் குறித்து உங்களின் உடனடித் தலையீட்டை நான் பணிவுடன் வேண்டுகிறேன்.

கல்வியில் சமத்துவம் மற்றும் இலக்கமுறை நிலைமாற்றம் ஆகியவற்றுக்கான தேசியக் கொள்கையில் அர்ப்பணிப்புகள் இருந்த போதிலும், வன்னி பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள் கட்டமைப்பு ரீதியான, மனிதவள ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. இவை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாணவர்களைக் கடுமையான பின்னடைவுக்கு உள்ளாக்குகின்றன.

பின்வரும் ஐந்து முக்கிய விடயங்களை நான் உங்கள் கவனத்திற்கு ஈர்க்க விரும்புகிறேன்:

01. கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை: வடமாகாணத்தில் மாத்திரம் ஆரம்பக் கல்வியில் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இது ஒரு குழந்தையின் கற்றல் பயணத்தின் அடித்தளத்தையே இது பாதிக்கின்றது.

02. முற்றுப்பெறாத மற்றும் கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டுமானங்கள்: வன்னிப் பிராந்தியத்தில் 20 இற்கும் மேற்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் முற்றுப்பெறாமலும், பயன்படுத்த முடியாத நிலையிலும் கைவிடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

03. இலக்கமுறை இடைவெளி மற்றும் தகவல் தொழில்நுட்ப (ICT) நெருக்கடி: மன்னார் கல்வி வலயத்தில் 45 பாடசாலைகளுக்கு இணைய வசதி இல்லை, 26 பாடசாலைகளில் ஒரு கணினி கூட இயங்கும் நிலையில் இல்லை. வன்னிப் பிராந்தியத்தில் தற்போது 2000 இற்கும் மேற்பட்ட கணினிகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. ( மன்னார் கல்வி வலயத்தில் 539, முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 552, வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 318). இலத்திரனியல் மயமாக்கலில் சமத்துவத்தை உறுதி செய்ய இவற்றை பழுதுபார்க்க அல்லது மாற்றீடு செய்ய ஒரு முறையான பொறிமுறையை விரைவாக உருவாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

04. சுகாதார வசதிகள்: குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை என்ற விகிதம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது. பாடசாலைகளுக்கு கிடைக்கும் மிகவும் குறைவான பராமரிப்புச் செலவு காரணமாக பாடசாலைகள் சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்கொள்கின்றன. இது குறிப்பாக மாணவிகளின் வரவு மற்றும் பாதுகாப்பினைப் பாதிக்கின்றது.

05. கற்றல் பெறுபேறுகளில் உள்ள ஏற்றத்தாழ்வு: தேசிய மதிப்பீடுகளின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் பின்தங்கியுள்ளனர். சமமற்ற வளப் பகிர்வும், ஆசிரியர் பற்றாக்குறையுமே இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, பின்வரும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சை நான் தயவோடு கேட்டுக்கொள்கிறேன்:

1. வன்னிப் பிராந்தியத்திற்கென பிரத்யேகமான ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றத் திட்டம்.
2. பாதியிலேயே கைவிடப்பட்ட அனைத்து பாடசாலைக் கட்டடங்களையும் உடனடியாகக் கட்டி முடித்தல்.
3. வசதிகள் அற்ற பாடசாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கணினிகள், இணையம் மற்றும் ஆய்வுகூட வசதிகளை வழங்குதல்.
4. கிராமப்புறப் பாடசாலைகளுக்கு பிரத்தியேக சுகாதார மற்றும் பராமரிப்பு நிதியுதவி வழங்குதல்.
5. முல்லைத்தீவு மற்றும் வன்னிப் பிராந்தியத்தின் உண்மை நிலையை நேரில் கண்டறிய தாங்கள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு, மாணவர்களின் நிலையை அவதானித்தல்.

வன்னிப் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு குழந்தையும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் பின் தங்கிவிட மாட்டார்கள் என்பதை உங்கள் தலைமையின் கீழ் உறுதி செய்ய முடியும் என நான் பெரிதும் நம்புகிறேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!