திரு. திலித் ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர், “மாகாண சபைகள் இலங்கைக்கு பொருத்தமற்றவை” என அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
திரு. திலித் ஜயவீர அவர்கள் ஒரு திறமையான சட்டத்தரணியும், முன்னணி தொழிலதிபரும், சிங்கள தேசியவாதியாக அரசியலில் செயல்படுவதாகவும் குறிப்பிட்ட நீதியரசர், அவரது சிங்கள தேசியவாதத்தை முழு இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாக கருதுவது தவறான புரிதல் என சுட்டிக் காட்டினார்.
அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், புத்தமதம் பரவுவதற்கும், சிங்கள மொழி உருவாவதற்கும் முன்னரே, தமிழ் மொழி பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களாக இருந்துள்ளன என அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் கே. இந்திரபாலாவின் ஆய்வுகளின் படி, தமிழ் பேசும் மக்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதும், 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தம் இதனை அரசியல் ரீதியாக அங்கீகரித்துள்ளதும் அவர் நினைவூட்டினார்.
மாகாண சபைகளின் உண்மையான நோக்கம்
மாகாண சபைகள் முழு இலங்கைக்காக அல்ல, மாறாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு தன்னாட்சி வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடு என நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
“சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களுக்கு மாகாண சபைகள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் அவை சிங்கள மக்களின் நலனுக்காக உருவாக்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்ட அவர்,
தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்ட காரணங்களாக,
1956 ஆம் ஆண்டு சிங்கள மொழி மட்டும் அரச மொழியாக்கப்பட்ட சட்டம்,
1958, 1977, 1981 மற்றும் 1983 இனப்படுகொலை,
1971 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக தரநிலைப்படுத்தல் (Standardisation) போன்ற அரச கொள்கைகள், தமிழ் மக்களின் அரசியல் நம்பிக்கையை முற்றிலும் உடைத்தன, இவைதான் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளப்பட்டதற்கான அடிப்படை காரணங்கள் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச சட்டமும் சுயநிர்ணய உரிமையும்
சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் (ICCPR) –
கட்டுரை 1 இன் படி, “எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது” என்பதையும், அது தனி நபர்களுக்கல்ல, மக்கள் என்ற குழுவுக்கே உரியது என்பதையும் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.
மேலும் வடக்கு – கிழக்கின் தமிழ் பேசும் மக்கள், ICCPR வரையறைப்படி ஒரு “இன மக்கள்” ஆகும் என்றும், அவர்களுக்கு சுய ஆட்சி உரிமை உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனினும் இன்றுள்ள மாகாண சபை அமைப்பு, தமிழ் மக்களுக்கு முழுமையான தன்னாட்சியை வழங்கவில்லை. ஆனால், அதற்கு மாற்றான அரசியலமைப்பு ஏற்பாடு உருவாகும் வரை, மாகாண சபைகளை ஒழிப்பது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முற்றிலும் அழிக்கும் செயல் ஆகும்” என நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அதனால், “மாகாண சபைகள் இலங்கைக்கு பொருத்தமற்றவை” என்ற திரு. திலித் ஜயவீர அவர்களின் கருத்தை, தான் திடமாக நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


Recent Comments