இலங்கையில் காணப்படும் மோசமான சட்டங்களான மகாவலி அதிகார சபை சட்ட மூலம், பயங்கரவாத சட்ட மூலம் மற்றும் வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களங்களுக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கிய சட்டமூலங்கள் திருத்தம் செய்யப்படவேண்டுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை முன்வைத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (09.01) இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்யும் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இங்கு உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலங்களின் ஒழுங்குவிதிகளில் திருத்தம் கொண்டு வரப்படுவதற்காக நாங்கள் விவாதிக்கின்றோம்.

அந்த வகையில் காலசூழ்நிலைக்கு ஏற்ப, நாட்டு மக்களிந் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சட்டங்களில் மாற்றம் செய்யப்படவேண்டிய தேவை இருக்கின்றது, அந்த சட்டங்களிற்கு கீழே வருகின்ற ஒழுங்குவிதிகளை மாற்றம் செய்ய வேண்டியிருக்கின்றது.
எமது நாட்டில் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களில் மிகவும் பாரதூரமான மனித உரிமைகளைக்கு மதிப்பளிக்காத இந்தநட்டின் குடிமக்களை சமனாக நடத்தாத பல மோசமான சட்டங்கள் இருந்திருக்கின்றது. இந்த நாட்டில் வாழும் மக்களை அடக்கி ஒடுக்கக்கூடிய பல சட்டங்கள் இருந்திருக்கின்றது. அந்தவகையிலே இந்தச்சட்டங்களை காலசூழ்நிலைக்கு ஏற்ப மாற்றவேண்டிய கடப்பாடு இப்பாராளுமன்றத்திற்கு இருக்கின்றது.
ஆகவே இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் இறக்குமதி, ஏற்றுமதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்யும் விடயத்தை எடுத்து பார்க்கும்போது, இங்கே விவாதிக்கப்படுகின்ற ஏற்றுமதி, இறக்கிமதி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றமை காலத்தின் தேவையாக இருக்கின்றது. ஆனால், இந்த சட்டத்தின் ஒழுங்குவிதிகளில் செய்யப்படுகின்ற மாற்றங்களை குறிப்பிட்ட அந்த தேவைக்காக மட்டும் பாவிக்க வேண்டும் என்பதை ஒரு எச்சரிக்கையாக இந்த சபைக்கு சொல்ல விரும்புகின்றேன்.
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களிற்க்கு உதவும் முகமாக வெளிநாட்டு நிறுவனங்கள், அரசாங்கள், வெளிநாட்டிலே வாழும் தனிநபர்கள் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு வழங்கும் நன்கொடைகளை எந்தவிதமான இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு உரிமமும் இல்லாமல் எங்களது நாட்டுக்குள்ளே வரவழைக்கலாம் என்கின்ற அனுமதி இந்த சட்டத்தின் திருத்தப்படும் ஒழுங்குவிதிகளினூடாக வழங்கப்படுகின்றது.
மோசமான ஒரு அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள சூழல்நிலையில் அவ்வாறான ஒரு அனுமதியை வழங்குவது அவசியமானதாக இருந்தாலும் இந்த அனுமதியை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூற விரும்புகிறேன். ஏனெனில் இவ்வாறான விசேட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் தங்களுக்கு தேவையான, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு புறம்பான விடயங்களை செய்யலாம் என்ற எச்சரிக்கையினையும் அரசாங்கத்திற்கு சொல்ல விரும்புகிறேன்.
அவ்வாறே இந்த சட்டத்தினூடாக நன்கொடையாக கிடைக்கும் இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் அவசியமான, எமது நாட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்கள் போன்றவற்றை கொண்டுவருவதற்கு கூட இந்த சட்டத்தில் அனுமதி வழங்கப்படுகின்றது.
2004ம் ஆண்டு இந்த நாடு மிக மோசமாக சுனாமியால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வைத்தியராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன்.
அங்கு கிடைக்கப்பெற்ற இவ்வாறான நிவாரனப்பொருட்களில் அவை உணவுப் பொருட்களாக இருக்கலாம், மருந்துப் பொருட்களாக இருக்கலாம், அல்லது உடுபுடவைகளாக இருக்கலாம் கனிசமானவை எங்கள் நாட்டின் காலநிலைக்கு ஒவ்வாத உடுதுணிகளாக, எங்கள் நாட்டில் பேசப்படாத, புரியப்படாத மொழிகளிலே விளக்கம் கொடுக்கப்பட்ட மருந்துகளாக எங்கள் மக்கள் பயன்படுத்த பழக்கப்படாத உணவுப் பதார்த்தங்கள், எமது மக்கள் பயன்படுத்தாத பிளாஸ்ரிக் பொருட்கள் என பல வகையான நிவாரணப் பொருட்கள் வந்து சேர்ந்தது.
இறுதியில் எங்களுடைய நிர்வாகத்திற்கு அந்தப்பொருட்களை எவ்வாறு கையாளுவது என்று தெரியாமல் களஞ்சியங்கள் யாவும் நிறைந்து மக்களிற்கு பயனில்லாமல் அவற்றை இருப்பிலிருந்து வெளியே எடுப்பதற்கு பட்டபாடு அந்த காலத்தில் பணியாற்றிய அரச உத்தியோகத்தர்களுக்கு நன்கு தெரியும். ஆகவே, இந்த சட்டத்தை பயன்படுத்தி எங்களுக்கு கிடைக்கக் கூடிய பொருட்கள் எல்லாவற்றையும் கையேந்தி வாங்காமல் , கட்டுப்பாட்டுடன் பொருட்களை பெற எத்தணிக்க வேண்டும்.

அதேபோல இன்னொரு முக்கிய விடயம் யாதெனில், இலங்கை தரநிலைகள் நிறுவனத்தின் அனுமதி பெறாமல் பெறக்கூடிய பொருட்களை நாட்டிற்கு உள்ளே கொண்டுவரலாமா இல்லையா என்கின்ற தீர்மானத்தை இறுதியாக எடுக்கக் கூடியவராக இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஒரு தனிநபருக்கு இவ்வளவு பெரிய அதிகாரத்தை கொடுப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இவ்வாறே எமது நாட்டில் இன்னும் பல சட்டங்களை மாற்ற வேண்டிய தேவையுள்ளது. நாட்டு மக்களின் ஒரு பகுதியினரை குறிவைத்து அவர்களின் அடிப்படையான வாழும் உரிமையை இல்லாமல் செய்கின்ற பல சட்டங்கள் இன்றும் வலிதானவையாக இருக்கின்றன.
எங்கள் நாட்டிலே இருக்கின்ற மிகமோசமான சட்டங்களை பார்த்தால், குறிப்பாக பயங்கரவாத தடுப்புச்சட்டம், மற்றும் மகாவலி அதிகாரசபையை உருவாக்கிய சட்டமூலங்களை குறிப்பிடலாம். அவர்களிற்கு எந்த விசாரனையும் இல்லாமல் சிறைப்படுத்தக்கூடிய, எமது காணிகளை ஆக்கிரமிப்பதற்கு எல்லையற்ற சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல வனவளத் திணைக்களம், வணஜீவராசிகள் தினைக்களம் போன்ற எல்லையற்ற அதிகாரம் குவிக்கப்பட்ட மேற்படி திணைக்களங்கள் இந்த நாட்டில் எவராலும் கட்டுப்படுத்த முடியாதவையாக உள்ளன.
எம் மக்களுக்கு தொடர்ச்சியாக துன்பங்களை தருபவர்களாக எமது இருப்பை, வாழும் உரிமையை மறுக்கின்ற திணைக்களங்களாக இவை உள்ளன. இவ்வாறான சட்டங்களிலும் நாம் மாற்றங்களை கொண்டுவர வேண்டியுள்ளது.
அதேபோல எமக்குப் பிரயோசனமான சில மாற்றங்களை சட்டங்களில் செய்ய வேண்டிய தேவை எமக்குள்ளது. மிகக் குறைந்த வருமானத்தை பெறும் உள்ளூராட்சி சபைகளை எடுத்துக் கொண்டால், அவற்றை பலப்படுத்தக் கூடிய பல சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டிய தேவை எமக்குள்ளது.
நாம் சிறுவர்களாக இருந்தபோது உள்ளூராட்சி சபைகள் மிதிவண்டிகளிற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதனூடாக தமக்கான வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இப்பொது அவர்களால் அந்த அனுமதிப் பத்திரம் வழங்கமுடியாமல் இருக்கின்றது.
ஏனெனில், அந்த இலக்கத் தகட்டை வழங்க இப்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி சபை வாங்கக் கூடிய கட்டணம் 5 ரூபாய். ஆனால் இலக்கத்தகடு செய்ய செலவாகும் பணம் 25 ரூபாய். ஆகவே அந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு 20 ரூபாய் செலவை உள்ளூராட்சி மன்றங்கள் தமது வருமானத்தில் இருந்து செலவு செய்ய வேண்டும். ஆகவே அந்த சட்டத்தையும் உடனடியாக திருத்த வேண்டும்.
அதேபோல இந்த உயரிய சபையில் நேற்று வீதிவிபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்களையும் துன்பங்களையும் குறைப்பதற்காக சட்டத்திருத்தம் ஒன்றினை கொண்டுவந்து விவாதித்திருந்தோம்.
நான் பல இடங்களில் இதுபற்றி பேசியிருக்கின்றேன். குறிப்பாக வடக்கு கிழக்கை எடுத்துக் கொண்டால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பிரதானமான காரணங்களில் ஒன்றாக இருப்பது கட்டாக்காலி விலங்குகள். குறிப்பாக உரிமையாளர்களால் முறையாக பராமரிக்கப்படாத கால்நடைகள். அந்த விலங்குகள் இரவு நேரத்தில் வீதியில் படுத்திருப்பதால் பலபேர் அவற்றுடன் மோதுண்டு இறக்கின்றார்கள்.
எமது நாட்டில் யுத்தத்தால் இறந்தவர்களை விட வீதி விபத்துக்காலால் இறந்தவர்கள் அதிகம். ஒரு வருடத்திற்கு சராசரியாக 2500 பேர் இந்த விபத்துக்களால் இறக்கின்றார்கள், 35,000 நபர்கள் காயங்களுக்கான மருத்துவ சிகிச்சை பெறுகிறார்கள்.
நான் குறிப்பிடும் சிறிய ஒரு விடயத்தை செய்தால் பல விபத்துக்களை தடுக்கலாம். அதாவது கால்நடை சுகாதார திணைக்களத்தால் ஒவ்வொரு பதிவு செய்யப்ப்பட்ட கால்நடைக்கும் காதிலே ஒரு பட்டி அணிகிறார்கள். அந்த பிளாஸ்ரிக் பட்டியை இரவிலே வெளிச்சத்தில் ஒளிரக் கூடிய வகையில் ஒளிரும் பட்டியாக போட்டால் இரவு நேரத்தில் இடம்பெறும் பல விபத்துக்களை தடுக்கலாம்.
இறுதியாக, எமது நாட்டில் இருக்கின்ற பல சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்களுக்கு பிரயோசனமான மாற்றங்கள் வரும் போது நிச்சயமாக எமது ஆதரவு அரசாங்கத்திற்கு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.


Recent Comments