Friday, January 23, 2026
Huisதாயகம்கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலான புதிய வரைபை வாபஸ் பெறுங்கள்..!

கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலான புதிய வரைபை வாபஸ் பெறுங்கள்..!

நீதியமைச்சினால் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு கருத்து வெளிப்பாடுச் சுதந்திரம், தனியுரிமை மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளுக்கு அச்சுறுத்தலானதாக இருப்பதனால், அதனை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என கத்தோலிக்க பாதிரிமார் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கப் பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் கத்தோலிக்க பாதிரிமார் 37 பேர், கத்தோலிக்க அருட்சகோதரிகள் 3 பேர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் 8 பேர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதியமைச்சின் இணையத்தளத்தில் புதிய சட்ட வரைவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தடைச் சட்டமானது சிறுபான்மையின மக்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்துப் பிரயோகிக்கப்படுவதனை மேற்கோள்காட்டி, அச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது.

முதலில் தற்காலிக நடைமுறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், பின்னர் நிரந்தர சட்டமாக்கப்பட்டது. அச்சட்டமானது ஒருவரைப் பிடியாணையின்றிக் கைது செய்வதற்கும், 18 மாதங்கள் வரை தடுத்து வைப்பதற்கும் இடமளிப்பதுடன், குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான மீறல்களுக்கு இடமளிப்பதாகக் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.

இவ்வாறானதொரு பின்னணியில் புதிய வரைவை வெளியிட்டிருப்பதன் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அதிகாரங்களையும் அரச ஆதிக்கத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கான அரசாங்கத்தின் தற்போதைய நகர்வானது ஒடுக்குமுறைச் சட்டங்களை நீக்குவதாகவும், சிவில் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகவும் அளித்த தேர்தல்கால வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.

அதுமாத்திரமன்றி இப்புதிய சட்ட வரைவானது கருத்து வெளிப்பாடுச் சுதந்திரம், தனியுரிமை மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளுக்கு அச்சுறுத்தலானதாக இருப்பதனால், அதனை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!