இலங்கையில் திட்டமிட்டும், பரவலாகவும் இடம்பெற்ற மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு உடனடி நீதியும், பொறுப்புக் கூறலும் வழங்கப்படுவதுடன், தமக்கு தொடர்ச்சியான உளவியல் மற்றும் சமூக ஆதரவும் தேவையென்றும் கூறுகின்றார்கள்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP), பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்து, வெளிநாடுகளுக்குத் தப்பி வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுடன் இரண்டு ஆண்டுகள் தாம் நடத்திய கலந்தாய்வின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.
பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை மையமாகக் கொண்ட இழப்பீடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த அறிக்கை ஆராய்கின்றது.
இழப்பீடுகள் எப்படி இருக்க வேண்டும்
“என்னைப் பொறுத்த வரையில், இழப்பீடு என்பது பிரதானமாக உளரீதியான நிவாரணமே ஆகும்-பாதிக்கப்பட்டவர்களை உளரீதியாகவும், சிகிச்சை மூலமாகவும் குணமடைவதற்கு உதவுவதே. இரண்டாவதாக, இந்த அட்டூழியங்களுக்காக இலங்கை ஆட்சியாளர்களைப் பொறுப்புக் கூற வைக்க வேண்டும்” இவ்வாறு பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்த ஒருவர் கூறினார்.
2009இல் முடிவடைந்த ஆயுத மோதலின் போதும், அதற்குப் பின்னரும் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் வன்புணர்வுக்கும் இதர பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாகி, உயிர் தப்பிய ஆண்கள், பெண்கள் என ஐம்பது பேரிடம் (ITJP) கலந்தாய்வு நடாத்தியது.
சிறிலங்காவில் போர்நடந்த வடக்கிலும் கிழக்கிலும் இவ்வாறான கலந்தாய்வினை நடாத்துவது பாதுகாப்பானதும் கிடையாது அதற்கு அனுமதி கிடைக்கவும் மாட்டாது என்பதால் இந்த ஆய்வு இலண்டனில் நடாத்தப்பட்டது.

68 பக்கங்களைக் கொண்ட “Opening a Conversation: The Justice and Reparations Needs of Exiled Tamil Survivors of Conflict-related Sexual Violence” என்னும் இந்த அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களால் வரையப்பட்ட சித்திரங்களும் அவர்களது வாக்கு மூலங்களிலிருந்து சில மேற்கோள்களும் இடம் பெற்றுள்ளன.
இக்கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களில் பலர் போர் முடிந்த பின், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிறிலங்காவில் வாழ்ந்தவர்கள். அவர்கள் தமக்கு அவசரமான தேவைகள் எவை என்பதை அடையாளம் கண்டு வெளிப்படுத்தினர்.
முழுமையான உளவள மற்றும் ஆரோக்கிய ஆதரவு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான குடியிருப்பு, சேர்ந்திருக்கும் உணர்வையும் சமூகத்தையும் மீளவும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள், சட்டரீதியான தீர்வுகள், மற்றும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டநடவடிக்கைகள் எடுத்தல் என்பன இதில் அடங்கும்.
மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கை, பாதுகாப்பான சூழல், ஆரோக்கியமான மனநிலை, தரமான கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு” என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது.
அவமானத்தின் சின்னமாக நாங்கள் பார்க்கப்படுகின்றோம்
பாலியல் வன்முறைகள் தனிநபர்கள் மீதும் பரந்துபட்ட தமிழ்ச் சமூகத்தின் மீதும் ஏற்படுத்தியிருக்கும் நீண்டகாலப் பாதிப்புக்களை இந்த அறிக்கை வெளிப் படுத்துகின்றது. ‘அதன் தாக்கம் உணர்வை மரத்துப்போகச் செய்து விட்டது” என்று ஒருவர் கூறினார்.
“அவமானத்தின் சின்னமாக நாங்கள் பார்க்கப்படுகின்றோம்” என இன்னொருவர் தெரிவித்தார். தாம் இலங்கையில் இருந்த போதும் சரி, அல்லது புலம்பெயர்ந்து இருக்கும் போதும் சரி தங்களது வாழ்க்கையில் பயம், களங்கம் மற்றும் தனிமை வாட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் விபரித்தார்கள்.

சீருடை தரித்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பயங்கரக் கனவுகள், திடீர் நினைவுகள் என்பன இப் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது குடும்பத்திடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் விலக்கி வைத்திருக்கின்றன.
மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ‘பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கிணற்றில் குதித்தோ அல்லது தூக்கில் தொங்கியோ தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறெந்தத் தெரிவும் இல்லை” என பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

தன்னுடைய உடலிலுள்ள தழும்புகள் பற்றி தன்னுடைய சிறுமகன் தன்னிடம் கேட்ட போது தனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என பாதிக்கப்பட்ட ஒரு தந்தை வேதனையுடன் தெரிவித்தார். பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்கள், முதலில் தாம் அரசால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் தங்களது சொந்தச் சமூகத்தினாலும் பாதிப்படைந்ததாகவும், தமது இரட்டைப் பாதிப்புப் பற்றிக் கூறினார்கள். ‘
இது எங்கள் குடும்பத்திற்கே பிரச்சினையை ஏற்படுத்துகின்றது – எங்களது சொந்தக் குடும்பமே எங்களை விமர்சித்து, ஒரங் கட்டுகின்றது, எங்கள் சமூகமும் அதையே செய்கின்றது”. ‘சில நேரங்களில், சிறிலங்கா பாதுகாப்புப் படையினரின் பாலியல் தாக்குதல்களுக்கு நாங்கள் ஆளாக்கப்படுகின்ற நேரத்தில், தமிழ்ச் சமூகத்திலுள்ள இதர மக்கள் எங்களைத் துஷ்பிரயோகம் செய்து, அதனையே எமக்கும் செய்ய முயல்கின்றனர்.”
ஆண்களையும் பெண்களையும் கொண்ட இக்குழு, ஒரு உளவளத் துணைச் செயற்பாட்டிற்காக வாரந்தோறும் இலண்டனில் சந்தித்தது – இதற்கான நிதியுதவி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
கண்ணாடி முன்னால் நின்று எங்களையே எம்மால் பார்க்க முடியவில்லை
பிரித்தானியாவிலும் இலங்கையிலும் மருத்துவ மற்றும் உளவளத் துணை உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர் கொண்டதாகத் தெரிவித்தனர். பாலியல் வன்முறையிலிருந்து உயிர் தப்பிவந்த ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருந்து தங்களது அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியது இதுவே முதன் முறையாகும்.
‘இந்தக் கலந்தாய்வில் கலந்து கொண்ட பின்னர், பாலியல் வன்முறைகளால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான தாக்கங்களே ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்டேன். இது முக்கியமான உண்மை” என இன்னொரு பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
இதுவரை பேசப்படாமல் இருந்த இப்படியான விடயத்தைப் பற்றிப் பேசுவதற்கு பங்கேற்பாளர்கள் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினர், ஆயினும் பேசுவதற்குப் பாதுகாப்பான சூழல் உள்ளது என்பதை உணர்ந்த பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதுபற்றிக் உரையாடத் தொடங்கினார்கள்.

‘பாதிப்புக்கு ஆளாக்கப்பட்ட பின்னர் கண்ணாடி முன்னால் நின்று எங்களையே எம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால் இப்போது எங்களால் அதனைச் செய்ய முடியும். இது ஒரு பெரும் சாதனையே,” இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறினார்.
வெறுமனே பாலியல் வன்முறைகள் மட்டுமன்றி, அதி பயங்கரமான மீறல்களையும் இப் பாதிக்கப்பட்டவர்கள் எதிர் கொண்டார்கள். ‘பொதுவாக, அவர்களும் அல்லது அவர்களது அன்புக்குரியவர்களும் சண்டைக்கு ஆட் சேர்க்கப்பட்டார்கள், திரும்பத் திரும்ப இடம் பெயர்ந்தார்கள், குண்டுத் தாக்குதல்களுக்கும் எறிகணைத் தாக்குதல்களுக்கும் ஆளானார்கள், பட்டினியால் வாடினார்கள், மருத்துவ உதவியின்றித் தவித்தார்கள், தமது விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைக்கப்பட்டார்கள், சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதையோ அல்லது விசாரணை ஏதுமின்றிச் சுட்டுக் கொல்லப் படுவதையோ நேரடியாகக் கண்டார்கள்” இவ்வாறு ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.
இழப்பீடுகள் பற்றிய இந்த ஆய்வு பாலியல் வன்முறைகள் பற்றியே குறிப்பாக கவனம் செலுத்திய போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஒரு குறிப்பிட்ட இனம் என்பதற்காக நடாத்தப்பட்ட பரந்துபட்ட தாக்குதலின் ஒரு பகுதியாகவே இதனை நோக்கினர்.
‘தமிழர்களுக்கான தனித்துவமானதும் கலாச்சார ரீதியிலானதுமான அடையாளங்களையும், மனோதிடத்தையும் அழித்தொழிக்கும் நோக்குடன் நடாத்தப்படும் சித்திரவதையின் ஒரு பகுதியாகவும் தனிநபர்களை அவமானப்படுத்துவதற்கும் நன்றாகத் திட்டமிட்டு வேண்டுமேன்றே இத்தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன.”
சடலங்களைக் கூட இராணுவம் துஸ்பிரயோகம் செய்தது
தாங்கள் அனுபவித்த பாலியல் வன்முறை தங்களது முழுச் சமூகத்தின் மீதும் ஆழமான மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தார்கள்:
‘பெண்களை, ஏன் பெண்களின் சடலங்களைக் கூட எவ்வாறு சிறிலங்கா இராணுவம் துஸ்பிரயோகம் செய்தது என்பது பற்றிய காணொளிகள் வெளிவந்து, எங்கள் சமூகத்தின்மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது” என அவர்கள் கூறினார். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் பெரு விருப்பம். “அவ்வாறு நடந்தால் அது எமக்குச் சிறிய ஆத்ம திருப்பதியைக்
கொடுக்கும்”.
2009இல் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து முன்னர் மோதல் நடந்த பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் கடத்தல், சித்திரவதை, பாலியல் வன்முறைகள் தொடர்ந்தும் நடைபெற்று வந்துள்ளது. ஐ. நா. அமைப்புக்கள் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்தும் வன்முறைகள் நடாத்தப்படுவதாகத் திரும்பத் திரும்ப வெளிப்படுத்திய போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இதனை மறுப்பதுடன், இக்குற்றங்கள் நடைபெறவில்லை என்றும் சொல்லி வருகின்றது.
சர்வதேச சட்டப் பொறுப்புக்களை மீறும் இந்த மறுப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாரதூரமான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தினால் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை விலக்களிப்புத் தொடர்பிலும் சர்வதேச சமூகம் தீர்க்ககரமாகச் செயற்படத் தவறியது தொடர்பிலும் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தினார்கள்.
சர்வதேச சமூகம் எதனையுமே செய்யவில்லை
‘முகவர் அமைப்பு” தொடர்பிலான விவாதம் அவர்கள் மத்தியில் ஆழமாகப் புதைந்திருந்த உணர்வுகளை வெளிப்படுத்தி, தம்மை விட்டு விலகாத துரோகம் மற்றும் அநீதி உணர்விற்கு ஒரு தீர்வு வேண்டும் கோரிக்கையாக மாறிய காரசாரமானதாக மாறியது.
‘எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இப்போரில் இறந்து போனார்கள். ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு சர்வதேச சமூகம் எதனையுமே செய்யவில்லை.
தற்போது நீங்கள் ‘முகவர் அமைப்புக்கள்” பற்றி எம்மிடம் கதைக்க விரும்புகின்றீர்களா? சர்வதேச சமூகமே எதுவும் செய்யாத போது, எங்களால் எதைத்தான் செய்ய முடியும்?” தாம் அனுபவித்த குற்றச் செயல்களுக்கு நீதி கிடைக்காதது மீண்டும் மீண்டும் பேசுபொருளாக மாறியது:
‘சட்ட முறைமையில் எமக்கான தீர்வு கிடைக்கப் போவது கிடையாது. நாம் ஒருவரைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு முயன்றால்கூட, அவர்கள் இதிலிருந்து தப்புவதற்கு மேலும் பத்து முறைகளைக் கண்டு பிடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதில்லை,’ எனப் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களது உள ஆரோக்கியத்திற்கும், கௌரவத்திற்கும், அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதற்கும் நீதியும் பொறுப்புக் கூறலும் அத்தியாவசியமானவை என்பதை இக் கலந்தாய்வு காட்டுகின்றது.
பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகரமான சர்வதேச பொறுப்புக் கூறல் கட்டமைப்பும், பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய முழுமையான பரிகாரங்களும், நீடித்து நிலைக்கக் கூடிய உளவளத் துணையும் அவசியம் என்பதை இது வலியுறுத்துகின்றது.
சிறிலங்காவில் நடந்துவரும் மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் படியும், தண்டனை இன்மையினையும் மறுதலிப்பினையும் முடிவுக்குக் கொண்டு வரும் படியும், தொடர்ந்து நடைபெற்று வரும் அடக்குமுறைக்கு எதிராகத் தங்கள் மௌனத்தை உடைக்கும் பாதிக்கப்பட்ட உயிர் பிழைத்தவர்களின் குரல்களை வலுப்படுத்தும் படியும் ஐக்கிய நாடுகள் சபை, அதன் உறுப்பு நாடுகள், நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் ITJP அழைப்பு விடுக்கின்றது.


Recent Comments