Friday, January 23, 2026
Huisதாயகம்ஊழலற்ற அபிவிருத்தியே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு - பிமல் ரத்நாயக்கா

ஊழலற்ற அபிவிருத்தியே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – பிமல் ரத்நாயக்கா

திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

‘பாலதக்ஷ மாவத்தை’ மேம்பாலத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“திருடியும், வீண்விரயம் செய்தும் நாட்டை அழித்தமையாலும், நாட்டை வங்குரோத்து அடையச் செய்தமையாலும் ஏற்பட்ட பொருளாதாரக் குற்றங்களின் சாபத்திற்கு முழு நாடும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. நாங்கள் அந்த சவால்களை வெற்றி கொண்டு, திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறோம்.

கொழும்பு நகரின் மிகவும் பரபரப்பான வர்த்தக நிலையங்கள், ஜனாதிபதி செயலகம், பெருமளவான ஹோட்டல்கள் இப்பகுதியை அண்மித்து அமைந்துள்ளதால் இவ்விடம் குறிப்பிடத்தக்க வாகன நெரிசல் நிலவிய ஒரு இடமாகும்.

அந்த வாகன நெரிசலுக்குத் தீர்வாக மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்க சில வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

அவற்றில் இரண்டு மேம்பாலங்களின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த மேம்பாலம் 2022 ஆம் ஆண்டில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த ஒன்றாகும்.

ஆனால் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய காரணங்களால் இப்பாலத்தின் நிர்மாணப் பணிகள் நீண்ட காலம் தாமதமானது.

பொலிஸ் மா அதிபருடன் நாங்கள் மேற்கொண்ட கள விஜயத்தின் பயனாக, பொலிஸ் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் தொடர்பில் நிலவிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொண்டு நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்த முடிந்தது.

2,700 மில்லியன் ரூபாவில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்படவிருந்த இந்த மேம்பாலத்திற்கு, நிர்மாணப் பணிகள் தாமதமானதால் மேலதிகமாக மேலும் ஒரு பில்லியன் ரூபாவை செலவிட நேரிட்டது. இந்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்தமை மக்களுக்கு பெரும் வசதியாகவும் பயனாகவும் அமையும்.

இதன் நிர்மாணப் பணிகளைத் துரிதமாக நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸ் திணைக்களத்திற்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!