‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும் பணிகளிலிருந்து கிராம உத்தியோகத்தர்கள் நேற்று (ஜனவரி 19) முதல் விலகியுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவு நடவடிக்கைகளில் ஒரு முறைமையை ஏற்படுத்துதல், வழிகாட்டல்களைத் தயாரித்தல் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் மதிப்பீட்டின் கீழ் இழப்பீடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளை முறையாக மதிப்பீடு செய்யாமல் 5 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்குவதற்கும், அநாவசியமாக குடியிருப்பவர்களுக்கும் அந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தலைவர், இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தினால் எதிர்காலத்தில் கிராம உத்தியோகத்தர்கள் பல கணக்காய்வுப் (Audit) பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வீட்டு இழப்பீடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முற்படும் போது கிராம உத்தியோகத்தர்களுக்கு கிராம மட்டத்தில் பலத்த அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரால் மதிப்பீடு செய்யப்படாத வீடொன்றுக்கு இழப்பீடு வழங்கினால், அதற்கான பொறுப்புக்கூறல் கிராம உத்தியோகத்தர் மீதே சுமத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சுற்றறிக்கையில் பகுதியளவான சேதங்களுக்குரிய மதிப்பீடு அல்லது அளவுகோல்கள் முன்வைக்கப்படாததால், சுவரில் ஒரு விரிசல் ஏற்பட்டிருந்தாலும் அல்லது ஒரு தகரம் சேதமடைந்திருந்தாலும் 5 இலட்சம் ரூபாவை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


Recent Comments