Friday, January 23, 2026
Huisதாயகம்கிவுல் ஓயா பெயரில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள் - சத்தியலிங்கம் எம்.பி

கிவுல் ஓயா பெயரில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள் – சத்தியலிங்கம் எம்.பி

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கிவுல் ஓயா திட்டத்தின் பெயரால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்படுவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21.01.2026) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கிவுல் ஓயா திட்டமானது 2011ம் ஆண்டு திட்டமிடப்பட்டு நான்கு வருடங்களில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசு இப்போது திட்டத்தை நடைமுறைப்படுத்த நேற்றைய தினம் அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த 23,456 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு இவ்வருட வரவு செலவு திட்டத்தில் 2500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்ட முன்மொழிகளில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் நீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் திட்டம் என கூறப்பட்டாலும் 1983ம் ஆண்டு வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்ற பகுதியான மகாவலி -எல் வலயத்தின் நீர்த் தேவைக்காகவே இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.

மகாவலி -எல் வலயம் 480,000 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இத்திட்டத்தை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஆணையம்( UNDP) மற்றும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO) இணைந்து 1964-1968 காலப்பகுதியில் திட்டமிட்டிருந்தார்கள்.

இப்பிரதேசத்தில் குடியேற்றத்தை செய்து குடியேற்றவாசிகளிற்கான நீர்ப்பாசன ஆதாரங்களாக தண்ணி முறிப்புக்குளம் மற்றும் பதவியாக் குளங்களை பயன்படுத்துவதுடன் மேலதிக நீரை மகாவலி ஆற்றிலிருந்து வடமத்திய மாகாண கால்வாயினூடாக ( NCP-Canal) வழங்குவதாக திட்டமிடப்பட்டது.

ஆனால் அவ்வாறு மகாவலி ஆற்றின் நீரை கொண்டு வருவது சாத்தியமற்றது என அறிந்திருந்தாலும் அவர்களது உள்நோக்கம் வடக்கு மாகாணத்தில் இனப் பரம்பலை மாற்றுவதற்காக குடியேற்றம் செய்வதாகவே இருந்தது.

மகாவலி-எல் வலயத்தில் குடியேற்றம் செய்யப்படும் போது இந்தநாட்டில் வாழும் காணியற்ற அனைத்து இன மக்களையும் குடியேற்றியிருக்க வேண்டும், ஆனால் முழுமையான சிங்கள குடியேற்றமே அங்கு செய்யப்பட்டது. இவ்விடயத்தை நாம் சொல்லும்போது நீங்கள் இனவாதமாக சித்தரிக்கலாம்.

மகாவலி-எல் வலயத்தில் குடியேற்றப்பட்டவர்களின் குடிப்பெருக்கம் மற்றும் அதிகரித்த நீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் செய்யப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் மகாவலி ஆற்றிலிருந்து நீரை கொண்டு வருவது சாத்தியமற்றதாக இருப்பதால் கிவுல் ஓயா நீர் விநியோகத் திட்டத்தை முன்மொழிவதாக சொல்லப்படுகிறது.

மகாவலி-எல் வலயத்திற்கான நீரை வழங்கும் “கிவுல் ஓயா”திட்டத்திற்கான நீர் வரத்தானது வவுனியா வடக்கின் அடர்ந்த காடு மற்றும் நீர்ப்பாசன குளங்கள், வயல்களில் இருந்து சேகரிக்கப்படும் மழைநீரால் உருவாகும் சிற்றருவிகள் சேர்ந்து உருவாக்கிய ஆற்றை 4.41கி.மீ நீளமான அணைக்கட்டொன்றை கட்டுவதனூடாக நீரை தேக்குவதாகும்.

இவ்வாறு தேக்கப்படும் 3900 ஏக்கர் நீரேந்து பிரதேசம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வருவதுடன் இந் நீர்த்தேக்கத்தில் 64MCM அ-து 51,904 ஏக்கர் அடி நீர் சேகரிக்கப்படுவதோடு 13 கி.மீ நீளமான கால்வாயினூடாக 1700ஹெக்ரயர் ( 4100 ஏக்கர்) புதிய வயல் நிலத்திற்கு நீர் விநியோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதுகாலவரை குடியேற்றவாசிகள் பயன்படுத்திய 1700 ஏக்கர் வயலில் இரு போகம் விவசாயம் செய்வதற்கான மேலதிக நீரை வழங்கமுடியும்.

கிவுல் ஓயா திட்டத்தின் நீரேந்து பகுதியாகி பாதிக்கப்படும் வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு எந்தவிதமான பிரயோசனமும் இத்திட்டத்தினூடாக கிடையாது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதனூடாக திட்ட நன்மைகளாக 4372 ஏற்கனவே உள்ள விவசாயிகளும் 1628 புதிய விவசாயிகளுமாக 6000 விவசாய குடும்பங்கள் பயனடைவர். அத்துடன் ஏற்கனவே உள்ள 700ஹெக்ரேயர் (1700 ஏக்கர் )வயல் நிலங்களில் இரண்டு போகங்களிற்கான நீரை உறுதிப்படுத்தலுடன் 1700ஹெக்ரேயர் (4080 ஏக்கர்) புதிய நிலத்தில் புதிய குடியேற்றவாசிகள் குடியமர்த்தப்படுவர்.

அத்துடன் சுகாதாரம், கல்வி மற்றும் சந்தை வாய்ப்புகளை உறுதிப்படுத்தல், உள்ளூர் வீதிகள் மற்றும் ஏனைய வீதிகளை மேம்படுத்தி அயல் நகரங்கடன் இணைத்தல் ஆகியவற்றுடன் அங்கு வாழும் மக்களிற்கான குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் வழங்கல் என்பனவாகும்.

கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனால் வவுனியா மாவட்டம் பல சவால்களை சந்திக்க நேரிடும் என கருதுகிறேன்.

இத்திட்டத்தை நடைமுறைப்டுத்துவதற்காக ஏற்கனவே மகாவலி-எல் வலயத்திற்காக ஒதுக்கப்பட்ட 480,000 ஏக்கர் நிலத்திற்கு மேலதிகமாக கடந்த 2021ம் ஆண்டு மார்கழி மாதம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலூடாக 13,000 ஏக்கருக்கு அதிகமான நிலம் வனவள திணைக்களத்தினால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட பிரதேசம் வெடிவைத்தகல் மற்றும் பட்டிக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு சொந்தமான தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமாகும். விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் இதுவரை மனிதனால் அழிக்கப்படாத அடர்ந்த காடு, கடந்த கால இடம்பெயர்வுகளால் பாவிக்கப்படாத சிறு நீர்பாசன குளங்கள், வயல்கள் காணப்படுகிறது.

திட்ட நோக்கத்திற்காக பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படப் போகிறது. இவற்றுள் இலங்கையில் எங்கும் காணப்படாத தாவர மற்றும் விலங்கு வகைகள் அழிவடைவதுடன் அருகிவரும் தாவர, விலங்கினங்களின் முழுமையான அழிவும் ஏற்படும் எனவும் காடுகளில் வாழும் குறித்த பிரதேசத்திற்கு உரித்தான தாவர மற்றும் விலங்கினங்கள் அழிவடையும் என இத்திட்டத்திற்காக செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே உள்ள யானை-மனித மோதல் மேலும் மோசமடையும் எனவும் அங்கு காணப்படும் தொல்பொருள் சின்னங்கள் பாதிப்படையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா திட்டம், நாம் ஏன் அச்சமடைகிறோம்? , வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவு மற்றும் அதன் அயல் கிராமங்கள் தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பாரம்பரிய பிரதேசம். இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம்.

1983 காலப் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் அதனை தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தனர். இதனால் நீண்காலமாக அங்கிருந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் பயிர்ச்செய்கை செய்யப்படாது பராமரிப்பின்றி இருந்தது.

“திரிவச்சகுளம்”; வெடிவைத்தகல்லு கிராமத்திலுள்ள தமிழ் மக்களால் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த மூன்று சந்ததிக்கு முற்பட்ட வரலாற்றை கொண்ட கைவிடப்பட்ட குளமும் ஏறத்தாள 150 ஏக்கரிற்கு மேற்பட்ட வயற்காணிகளையும் கொண்டது.

இறுதி யுத்தத்திற்கு பின்னராக மக்கள் மீள்குடியேறிய நிலையில் காணி சொந்தக்காரர்கள் சிலர் 2019 காலப் பகுதியில் தமது மூதாதையரின் காணிகளை பயிச் செய்கைக்காக துப்பரவு செய்தபோது வனப் பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கலும் செய்யப்பட்டது.

வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

5 வருடங்கள் நீடித்த வழக்கு 2024ல் போதுமான ஆதாரங்களை வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் சமர்ப்பிக்க முடியாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனாலும் இந்த காலப்பகுதியை தமக்கு சாதகமாக்கி கொண்ட அயற்கிராமத்தில் குடியேற்றப்பட்ட பெரும்பான்மையின விவசாயிகள் மகாவலி அதிகாரசபையின் துணையுடன் குத்தகை அடிப்படையில் தமிழ் மக்களால் துப்பரவு செய்யப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் 10 விவசாயக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் தற்போது 25 குடும்பங்களாக அதிகரித்துள்ளதுடன், நெடுங்கேணி கமநலசேவைகள் நிலையத்தில் “அந்தரவெவ கமக்காரர்அமைப்பு” என்று பதிவு செய்துள்ளனர்.

வனப் பாதுகாப்பு திணைக்களத்தால் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் காணி உரிமையாளர்களுக்கு காணிக்குள் செல்வதற்கு தடைவிதித்துள்ள காலப்பகுதியில் எவ்வாறு மகாவலி அதிகாரசபை அந்தக் காணிகளை குத்தகைக்கு வழங்க முடியும்?

புதிய பெயரில் கமக்கார் அமைப்பாக பதிவு செய்ய முடியும் என்றால் இதற்கு அரசாங்க அதிகாரிகளும் பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.

இது இவ்வாறு இருக்க ஓரிரு மாதங்களிற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் 200 ஏக்கரிற்கு அதிகமான பிரதேசம் (1000 ஏக்கர் என்று சிலர் கூறுகின்றனர்) திட்டமிட்ட வகையில் காடழிப்பு செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள மக்களின் தகவலின்படி சுமார் 1½ மாதங்களிற்கு மேலாக 5 டோசர்களும் 2 ஜேசீபி இயந்திரங்களும் காடழிப்பில் ஈடுபட்டதாக கூறுகின்றனர்.

தமிழ் மக்கள் தமது விவசாயத் தேவைக்காக வேலி அடைப்பதற்காக தடிகளை வெட்டினால் சிறையில் அடைக்கும் வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு 1½ மாதங்கள் அதுவும் பாரிய இயந்திரங்களைக் கொண்டு காடழிப்பு செய்யப்பட்டமை தெரியாது போனமை ஆச்சரியமாக இருக்கின்றது.

அத்துடன் தற்போதைய விலைவாசியில் ஒரு ஏக்கர் காணி துப்பரவாக்குவதற்கே குறைந்தது ரூபா ஒரு இலட்சம் தேவைப்படுமென்றால் 200 ஏக்கரிற்கு மேற்பட்ட காடுகள் துப்பரவு செய்வதற்கு எத்தனை மில்லியன் தேவைப்பட்டிருக்கும்? அப்படியென்றால் இதனை சாதாரணமாக பொதுமக்களால் செய்ய முடியுமா? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்?

அண்மையில் செய்தியில் பார்த்தேன், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த பிரதேசத்திற்கு சென்று விசாரித்ததில் இந்தக் காடழிப்பு பற்றி பொலிசாரோ வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரோ அறிந்திருக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனை நம்பக்கூடியதாக உள்ளதா?

ஆக தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு கொள்கைளில் எந்த ஆட்சியிலும் எந்த விதமான மாற்றத்தையும் காணவில்லை. சுதந்திரத்திற்கு பின்னராக ஆட்சி பீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளமை தெளிவாக தெரிகின்றது. இதற்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்கல்ல என்பது தெளிவாகின்றது.

பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் முன்வைத்த தேர்தல் அறிக்கையில் “இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்ற உங்கள் வாக்குறுதியை மீறஎண்ணுகிறீர்களா?

மேலும் கடந்த அரசாங்கங்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்த மக்களின் வாழ்வுரிமையை பறிக்க எடுத்த நடவடிக்கைகளை நீங்களும் தொடர விரும்புகிறீர்களா?

அத்துடன் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தில் சிறுபன்மை மக்களின் பங்களிப்பு வேண்டாம் என என்னுகிறீர்களா?

மேலும் பாரிய நீர்பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்பட்டு சிங்கள மக்கள் மட்டும் குடியேற்றப்பட்டதை நீங்களும் தொடர விரும்புகிறீர்களா?

மேலும் எமது மாவட்டத்தில் அறவே வயற்காணியற்றவர்களுக்கு போரினால் கைவிடப்பட்ட குளங்களையும் வயல்க் காணிகளையும் விடுவிக்க முடியாத வனவளத் திணைக்களம் எவ்வாறு 13,000 ஏக்கர் காணியை யாருடைய அனுமதியின் பேரில் விடுவித்தார்கள்?

மேலும் வவுனியா மாவட்டத்தில் மகாவலி-எல் வலயத்திற்கு வெளியே வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான நீர்த்தேவை இல்லையா?

மேலும் இந்த நாட்டின் சாபமான இனவாதமும் மதவாதமும் ஊழலும் போதைப் பாவனையும் இல்லாத ஒரு நாட்டை நீங்கள் படைப்பீர்கள் என்ற என்னைப் போன்றவர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற வாய்ப்பே இல்லையா?

அத்துடன் கடந்த கால அரசுகளால் கொண்டு வரப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு பாதகமான திட்டங்களை துளியளவேனும் சீர்தூக்கிப் பார்க்காமல் நடைமுறைப் படுத்த ஆயத்தமாவதை என்னவென்று சொல்வது?

உங்களின் தூரநோக்கற்ற அரசியல் மேலாதிக்க சிந்தனை, கடந்த 3 தசாப்தங்களாக நடைபெற்ற கொடிய யுத்தம், இத்தனை இழப்புக்கள், பொருளாதார வீழ்ச்சி, இத்தனைக்கும் பின்பும் உங்கள் மனங்களில் தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற மனமாற்றம் வரும்வரை இந்தநாடு ஒருபோதும் உருப்படப் போவதில்லை என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!