Friday, January 23, 2026
Huisதாயகம்தமிழரின் இருப்பை அழிக்கும் கிவுல் ஓயா திட்டத்தை கடுமையான எதிர்ப்பேன் - ரவிகரன் எம்.பி

தமிழரின் இருப்பை அழிக்கும் கிவுல் ஓயா திட்டத்தை கடுமையான எதிர்ப்பேன் – ரவிகரன் எம்.பி

தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வடிவமான கிவுல்ஓயா திட்டத்தினைச் செயற்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக் கிழமையன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த கலந்துரையாடலில் தம்மால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் 21.01.2026இன்று இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கிவுல்ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 23ஆம்திகதி கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் அக்கலந்துரையாடலில் குறித்தவிடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்குமாறு அமைச்சர் கே.டீ.லால்காந்த இதன் போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட விருக்கின்ற கிவுல்ஓயா நீர்த்தேக்க கட்டுமானத்திட்டத்திற்கு 2.5பில்லியன் ரூபா நிதி இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினைச் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

குறித்த கிவுல் ஓயா திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள பூர்வீகத் தமிழ்மக்களின் பல சிறிய நீர்பாசனக் குளங்களும், அவற்றின் கீழான வயல் நிலங்களும், பழந்தமிழ் கிராமங்களும் பறிபோகும் அபாயம் ஏற்படுமென்பதை கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் லால்காந்தவின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

குறிப்பாக இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக் குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ்வரும் வயல் காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும்,

வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப் பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்துப் பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும் என்பதை இதன் போது அமைச்சருக்கு தெரியப்படுத்தினேன்.

இவ்வாறு தமிழ்மக்களுடைய பூர்வீக நிலங்களும், நீர்ப்பாசனக் குளங்களும் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென்பதையும் சுட்டிக் காட்டினேன்.

இதன் போது அமைச்சர் கே.டீ.லால்காந்த பதிலளிக்கையில்,

எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் போது இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலாம் எனத் தெரிவித்தார்.

எனவே எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த கூட்டத்திலும் கலந்து கொண்டு, கிவுல் ஓயாத் திட்டத்தினால் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பில் சுட்டிக் காட்டுவதுடன், இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிப்பேன் – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!