Saturday, April 4, 2026
Huisதாயகம்மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக்குளச் சீரமைப்புப் பணிகள்; நேரில் சென்ற ரவிகரன் எம்.பி..!

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக்குளச் சீரமைப்புப் பணிகள்; நேரில் சென்ற ரவிகரன் எம்.பி..!

முல்லைத்தீவு – குமுழமுனை கமநலசேவை நிலையப் பிரிவிலுள்ள ஆண்டான்குளம் பகுதியில் அமைந்துள்ள நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் மந்தகதியிலும், வினைத்திறனற்ற வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதிக்குரிய கமக்கார அமைப்புப் பிரதிநிதிகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி கமக்கார அமைப்பு பிரதிநிதிகளின் அழைப்பையேற்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 02.04.2026 நேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு நித்தகைக்குளம் மற்றும், குளத்தின் கீழான 1500 ஏக்கர் வயல்நிலங்கள் என்பவற்றை வனவளத் திணைக்களம் ஆக்கிரமிப்புச் செய்திருந்தது.

இத்தகைய சூழலில் அப்பகுதி விவசாயிகள் மற்றும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருடைய தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து குறித்த குளம் வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டதுடன், குளத்தின் கீழான வயல் நிலங்களும் வனவளத் திணைக்களத்தால் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் அப்பகுதி விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2025ஆம் ஆண்டு நித்தகைக்குளத்தின் சீரமைப்பு வேலைகளுக்கென நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, குளத்தின் சீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் எதிர்வரும் 15.07.2026ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்படும் என்ற ஒப்பந்தத்துடன் தொடங்கப்பட்ட நித்தகைக் குளத்தின் சீரமைப்பு வேலைகள் தற்போது மந்தகதியில் இடம்பெற்று வருவதுடன், வினைத்திறனற்ற வகையில் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக் காட்டப்பட்டது. அத்தோடு சீரமைப்புப் பணிகளின் நிலைமைகளையும் விவசாயிகள் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் நேரடியாகக் காண்பித்தனர்.

குறிப்பாக 02கிலோமீற்றருக்கும் மேலான தூரமுடைய குளக்கடில் தற்போது 150 மீற்றர் வரையிலேயே சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இதன் போது தெரிவித்த விவசாயிகள், ஒப்பந்தக் காலத்திற்குள் சீரமைப்பு வேலைகள் முடிவுறுத்தப்படாதெனவும் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு குளக்கட்டுச் சீரமைப்பிற்கு பயன்படுத்தப்படும் மண் தூய்மைப் படுத்தப்படாமல், மரவேர்களுடன் பயன்படுத்தப்படுவதாகவும், முறையற்ற விதத்தில் சீரமைப்பு வேலைகள் செய்யப்படுவதாகவும், ஒப்பந்ததாரரிடம் போதுமான இயந்திர வசதிகள் இல்லையெனவும், வினைத்திறனற்ற வகையில் சீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.

இந்நிலையில் மந்தகதியிலும் வினைத்திறனற்ற வகையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சீரமைப்புப்பணிளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சீரமைப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுடனும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இவ்வாறு மந்தகதியிலும், வினைத்திறனற்ற வகையிலும் முன்னெடுக்கப்படும் சீரமைப்பு பணிகள் தொடர்பில் உரிய திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் இதன் போது தெரிவித்தார்.

மேலும் குறித்த சீரமைப்புப் பணிகளை துரிதகதியிலும், வினைத்திறனாகவும் முன்னெடுப்பதற்கு தம்மால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!