கள்ள உறவு காரணமாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (17) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவத்தில் வெலிஓயா, UDK பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெளிநாடு சென்றிருந்த இப்பெண், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே கண்டி, கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
பின்னர், இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் தனது குழந்தையுடன் வெலிஓயா தோட்டத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்ற நிலையில் மனைவி நீண்ட நாட்களாகத் தனது வீட்டிற்குத் திரும்பாததால், அவரை மீண்டும் அழைத்துச் செல்வதற்காகக் கணவன் நேற்று (16) மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன்போது, மனைவி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் கணவனிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியைக் கண்டித்ததோடு இது தொடர்பாக நேற்று மதியம் முதல் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியுள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியைக் கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய கணவன் மற்றும் கள்ள உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஆகிய இருவரையும் வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recent Comments