அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை (17) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த வகையில் காணி அளவீடு செய்ய வேண்டுமென புத்தசாசன அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, மே மாதம் 15ஆம் திகதிக்கு இடையில் அனைத்து பங்குதாரர்களையும் இணைந்த வகையில் தையிட்டி காணி அளவீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர், சிரேஸ்டநில அளவைத் திணைக்கள அத்தியட்சகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், காணி நிர்ணயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் (17) வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும் , அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments