Sunday, May 24, 2026
Huisதாயகம்மன்னாரில் கடற்படை ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து..!

மன்னாரில் கடற்படை ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து..!

மன்னார் – சிலாவத்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்க்களின் காணிகளை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அடுத்தவாரம் மன்னாருக்கு நேரடியாக வருகைதந்து குறித்த காணிவிடுவிப்புத் தொடர்பில் ஆராயப்படுமென பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் 22.05.2026இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவிடம் குறித்த முள்ளிக்குளம் காணி விடுவிப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே பிரதி அமைச்சரால் மேற்கண்டவாறு பதில் வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 25.05.2026ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த காணிவிடுவிப்புத் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுமென மன்னார் மாவட்ட செயலாளரால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வாய்முல விடைக்கான வினாவிற்கு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் இதன் போது பதிலளிக்கையில்,

முள்ளிக்குளம் பகுதியில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டுவரையில் 752ஏக்கர் காணிகள் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு கடற்படையினர் பயன்படுத்திவந்த பகுதியிலிருந்த 27 குடும்பங்களின் வீடுகளுக்குப் பதிலாக, கடந்த 2012ஆம் ஆண்டு மணற்காடுக் கிராமத்தில் கடற்படையினரால் 27வீடுகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டதாகவும் இதன்போது பிரதிப் பாதுகாப்பு அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த 77ஏக்கர் காணிகள் கடந்த 2017ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், குறித்த முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த மொத்தம் 829ஏக்கர் காணிகள் விடுவிப்புச் செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன் போது கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த முள்ளிக்குளம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளேன். எனவே பிரதிப்பாது காப்பு அமைச்சரினால் இங்கு தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தவறானவையெனச் சுட்டிக் காட்டுகின்றேன்.

முள்ளிக்குளம் கிராமமக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தனர். அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு முள்ளிக்குளம் மக்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

அவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட அந்த மக்களுக்கு அப்போது 150வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்றன. இந்நிலையில் 2002ஆம் ஆண்டு அந்த மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளை கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதில் பல வீடுகளில் கடற்படையினரின் குடும்பங்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முள்ளிக்குளம் கிராம மக்கள் மலைக்காடு, காயாக்குழி உள்ளிட்ட அயற் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடந்தகாலங்களில் தமது பூர்வீக கிரமத்தினை விடுவிப்புச்செய்து அங்கு தம்மை குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுவந்துள்ளனர்.

அதன்பின்னர் முள்ளிக்குளம் பகுதியிலுள்ள பாடசாலையில் கற்றல் செயற்பாட்டை மேற்கொள்வதற்கும், தேவாலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ன.

இந்நிலையில் அயற் கிராமங்களில் தங்கியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் பெருத்த சிரமங்களுக்கு மத்தியிலேயே பாடசாலைக்கும், தேவாலயத்திற்கும் நீண்டதூரம் சென்று வருகின்றனர்.

கடற்படையினர் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகிய தரப்பினரால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டுள் முள்ளிக்குளம் கிராமம் என்பது அந்த மக்களின் பூர்வீகக் கிராமமாகும்.

எனவே முள்ளிக்குளம் கிராம மக்களை தமது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் உடனடியாக அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கு மேலாக, வயற் காணிகள், தோட்டச் செய்கைக் காணிகள், நீர்ப்பாசனக் குளங்கள், என்பவற்றையும் கடற்படையினரும், வனவளத் திணைக்களத்தினரும் இணைந்து ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர்.

கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையை முற்றுமுழுதாக கடற்படையினரே ஆக்கிரமித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகள், நீர்ப்பாசனக் குளங்கள் கடற்றொழில் இறக்குதுறை என்வற்றை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இந்நிலையில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர இதன் போது பதிலளிக்கையில்,

கடந்த பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இந்த முள்ளிக்குளம் காணி விடுவிப்புத் தொடர்பில் தாங்கள் வலியுறுத்தியிருந்தீர்கள்.

அதற்கமைய இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியால் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இந்தவிடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அடுத்தவாரம் மன்னாருக்கு வருகை தரவுள்ளேன்.

அந்தவகையில் தேசிய பாதுகாப்பிற்கான மூலேபாய முக்கியத்துவம் வாய்ந்த, இடங்களை தக்கவைத்துக்கொண்டு ஏனைய இடங்களை விடுவிப்பது தொடர்பில் பரிசீலிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அந்த வகையில் அந்தப் பகுதிக்குரிய மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சிலாவத்துறைப் பிரதேச செயலகத்திற்கு அழைத்து காணிவிடுவிப்பு சார்ந்த விடயங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலப்பகுதிகளில் அந்தப்பகுதியின் கடற்கரைப் பிரதேசத்தில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தாம் விடுவிக்கக் கோரிய கடற்றொழிலாளர்களுக்குரிய அந்த இறங்குதுறையில் அவ்வாறான செயற்பாடுகள் இடமபெறுவதாக நாம் கூறவில்லை. எனவே அந்த இறங்கு துறையை விடுவிப்பது தொடர்பிலும் எம்மால் கூடுதல் கவனஞ் செலுத்தப்படும்.

அத்திய அவசியமான நிலப்பரப்பினை மாத்திரம் வைத்துக் கொள்வதுதான் எமது நிலைப்பாடாக இருக்கின்றது.

அவசர நிலைகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில், முப்படையினரை அங்கு நிலை நிறுத்துவதற்கான தேவைப்பாடு இருக்கின்றது.

பொலிசாரால் முன்னெடுக்க முடியாத சில நடவடிக்கைகளை, முப்படையினர் மூலம் முன்னெடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையிருக்கின்றது.

அதேபோல பேரிடர்கள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் உடனடியாகத் தொழிற்படுவதற்கு தேவையான இடமாக அந்த இடம் காணப்படுகின்றது.

எனினும் அடுத்த வாரம் நேரடியாக வருகை தந்து சிலாவத்துறை பிரதேச செயலாளர், உரிய அரச அலுவலர்கள், உரிய கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருடனும் இந்த காணிவிடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடுவோமென பாதுகாப்பு பிரதி அமைச்சரினால் இதன்போது பதிலளிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!