அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் பெண்களுக்கும், சிறார்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்தும், அந்த பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் அகில இலங்கை ரீதியாக 17மாவட்டங்களில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதன் ஒரு கட்டமாகவே முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஒழுங்குசெய்துள்ளது.
எனவே இதற்காக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் சகல நிர்வாகிகளுக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிறார்கள் மற்றும் பெண்கள் மதிக்கப்படுவதுடன், பாதுகாக்கப்படல் வேண்டும். அதுவே நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
எனவேதான் கடந்தகால அரசுகளின் ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு முடிவுகட்டுவதற்காகவே, தற்போதைய ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் ஆட்சி பீடத்திற்கு கொண்டு வந்தார்கள்.
இந்நிலையில் தற்போதைய ஆட்சியிலும் மிகவும் கேவலமானதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமான இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. அந்த வகையில் இத்தகைய அருவருக்கத் தக்க செயற்பாட்டைக் கண்டித்தே மக்கள் இங்கு கவனயீர்ப்பில் ஒன்று கூடியுள்ளனர்.
நிச்சயமாக இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும். பெரியவர், சிறியவர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி சட்டரீதியாக மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
சட்டம் என்பது அனைவருக்கும் சமனாகும். எனவே இந்தவிடயத்தில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கான நீதியை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசு வழங்கவேண்டும் என்பதை வலியுத்தியே 17மாவட்டங்களிலும் இவ்வாறு மக்களால் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
எனவே இதற்கான நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.


Recent Comments