உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் இணைந்து பல பயிற்சி முகாம்களில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு உறுதியளித்திருந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர், தற்போது இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக மாறி (State Witness) நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
200 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த வழக்கு விசாரணையின் போது, தானும் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த சத்தியப் பிரமாணம் செய்திருந்ததை நீதிமன்றில் ஏற்றுக் கொண்ட அவர், தாக்குதலின் பின்னணி மற்றும் வலையமைப்புகள் குறித்த பல இரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
நள்ளிரவு 12 மணி வரை நீண்ட இந்த நீதிமன்ற விசாரணையின் போது, சாட்சியாளரின் உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு அவரது பெயரைப் பகிரங்கப்படுத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், பலத்த பாதுகாப்புடன் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ரகசியமான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் திடீர் வாக்குமூலமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிவதில் சட்டப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள மிக முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.


Recent Comments