Saturday, July 18, 2026
Huisதாயகம்யாழ் சாவகச்சேரி நகரசபை புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்..!

யாழ் சாவகச்சேரி நகரசபை புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்..!

யாழ் சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழுப்பபட்ட ஆட்சேபனையை தொடர்ந்து அதனை நிறுத்த உள்ளூராட்சி ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் உப தவிசாளர் ஞா.கிஷோர் சபையில் தான் ஆற்றிய உரைக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்த எழுத்தாணை மனு, மூன்றாவது தடவையாக வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் நேற்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 13.07.2026 அன்று நடைபெற்ற முந்தைய தவணை விசாரணையின் போது, எதிர்மனுதாரர்களான வட மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் தனிநபர் விசாரணை அதிகாரி ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதிபதி கெடு விதித்திருந்தார். எனினும், குறித்த தினத்தில் ஆளுநர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் தரப்பால் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவில்லை.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான அவசரக் கூட்டத்திற்கு இரண்டாம் எதிர்மனுதாரரான வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளமையை, முறையீட்டாளரின் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இரண்டாம் எதிர் மனுதாரரான உள்ளூராட்சி ஆணையாளருடன் அரச சட்டத்தரணி கலந்தாலோசித்தார்.

அதன் பின்னர், இவ்வழக்கின் விவாதம் நடைபெறும் நாள் வரை புதிய உப தவிசாளர் தெரிவிற்கான கூட்டத்தை ஒத்திவைப்பதாக உள்ளூராட்சி ஆணையாளர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதன்படி, எதிர்வரும் 21ம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த புதிய உப தவிசாளர் தெரிவுக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, எதிர்மனுதாரர்களின் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காக வரும் 23ம் திகதிக்கு வழக்கை திகதியிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கின் இறுதி விவாதத்தை அடுத்த நாளான 24 அன்று நடத்துவதற்குத் திகதியிட்டுக் கட்டளையாக்கினார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!