கொழும்பு – பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு அதிகளவில் போதைப் பொருளை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சிறைக் காவலர் ஒருவர், 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தெஹிவளை, வைத்திய வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர், கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து இந்த போதைப்பொருள் தொகுதியுடன் முதலில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர் ‘வட்ஸ்அப்’ அழைப்பு மூலம் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த போதைப்பொருள் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அந்த போதைப்பொருள் பொட்டலத்தை பொரளை, வனாத்த வீதியில் வைத்து வேறொரு நபரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலின் அடிப்படையில், கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர், மற்றைய சந்தேக நபரையும் கைது செய்வதற்காக இரகசிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி, அதிகாரிகளைச் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தினர்.
இதன்போது, சிறைச்சாலையின் விளையாட்டு உடையில் வந்த நபர் ஒருவர், கைது செய்யப்பட்ட முதலாம் சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருள் பொட்டலத்தைப் பெற்றுக் கொள்ள முயன்ற போது, அங்கு மறைந்திருந்த பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சிறைக்காவலர் கடந்த ஜனவரி மாதம் மெகசின் சிறைச்சாலையில் பணிக்கு இணைந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியவர் என்றும் தெரிவிக்கின்றது.


Recent Comments