ஐக்கிய மக்கள் சக்தி (SJB) எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இருந்தாலும் சரி, புத்தாக்கம் செய்யப்பட்ட ஆற்றல் (Renewable Energy) திட்டங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதி அளித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புத்தாக்கம் செய்யப்பட்ட ஆற்றல் திட்ட உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி புத்தாக்கம் செய்யப்பட்ட ஆற்றல் மூலங்களிலிருந்தே பெறப்பட வேண்டும் என்பதில் தாமும் தமது கட்சியும் உறுதியாக நம்புவதாகவும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தக் கொள்கை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் சஜித் பிரேமதாச தெளிவுபடுத்தினார்.

எதிர்க்கட்சியில் இருக்கும் போது பசுமை ஆற்றல் பற்றி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் “வெப்பமின் மாஃபியாக்களுக்கு” அடிபணியும் அரசியல்வாதிகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.
அத்துடன், பணத்திற்கோ, பதவிகளுக்கோ அல்லது சலுகைகளுக்கோ SJB இன் கொள்கைகள் ஒருபோதும் அடகு வைக்கப்பட மாட்டாது என்றும், எந்தவொரு சூழ்நிலையிலும் புத்தாக்கம் செய்யப்பட்ட ஆற்றல் தொடர்பான கட்சியின் நிலைப்பாடு நிலையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்துறை வளர்ச்சி பெற உழைக்கும் அர்ப்பணிப்புள்ள ஆற்றல் முயற்சியாளர்களை விரட்டியடிக்க தற்போதைய அரசாங்கம் சதி செய்வதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், எதிர்கால SJB அரசாங்கத்தின் கீழ் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முழுமையான ஆதரவும் ஊக்கமும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.


Recent Comments