Wednesday, February 5, 2025
Huisதாயகம்மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள் - அஜித் ராஜபக்ஷ

மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள் – அஜித் ராஜபக்ஷ

நாட்டின் துரதிஷ்டத்தால் தான் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார். நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். ரணிலின் புண்ணியத்தால் நாட்டை நிர்வகிக்கும் உண்மையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மின்கட்டணத்தை குறைப்பதற்கான சாதகமான சூழலையே ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தினார் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை பகுதியில் ஞாயிற்றுக் கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, சொல்வது இலகு, செயற்படுவது கடினம் என்பதை தற்போதைய அரசாங்கம் உண்மை என்று நிரூபித்துள்ளது. தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார்.

அதேபோல் 75 ஆண்டுகால அரசியலை சாபம் என்று விமர்சித்து நாட்டுக்காக சேவையாற்றிய அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பை தோற்றுவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் போலியான வாக்குறுதி மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

தேர்தல் வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தி வழங்கிய நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளது. பொருளாதார மீட்சிக்கு அரசாங்கத்திடம் சிறந்த திட்டங்கள் ஏதும் கிடையாது.

ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கைகள் நாட்டுக்கு எதிரானது என்று விமர்சித்த தேசிய மக்கள் சக்தி இன்று அவரது கொள்ளைகளை அச்சொட்டாக அமுல்படுத்துகிறது. நாட்டின் துரதிஸ்டத்தின் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார்.

2020 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்து வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டொலர் என்ற நிலைக்கு சென்ற நாட்டை, இரண்டாண்டுக்குள் காப்பாற்றி வெளிநாட்டு கையிருப்பை 6000 பில்லியன் டொலர் வரை நிலைப்படுத்தினார்.

நாட்டு மக்களும் அறிவுபூர்வமாக சிந்திக்கவில்லை. வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி அரசியல் தீர்மானத்தை எடுத்தார்கள் இன்று அது மக்களுக்கே எதிரானதாக திரும்பியுள்ளது.

ரணிலின் புண்ணியத்தால் நாட்டை நிர்வகிக்கும் உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதியும், அரசாங்கமும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை. அரிசி உற்பத்தியாளர்களிடம் அரசாங்கம் முழுமையாக அடி பணிந்துள்ளது. மின்கட்டணத்தை குறைப்பதாக வாக்குறுதியளிக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார்.

பொய்யுரைப்பதையே இந்த அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த நவம்பர் மாதம் தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் மின்கட்டணத்தை குறைப்பதாக வாக்குறுதியளித்தார்.

மின்கட்டணத்தை குறைப்பதற்கான சாதகமான சூழலையே ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தினார். எமது அரசாங்கம் இன்று ஆட்சியில் இருந்திருந்தால் மின்கட்டணம் இரண்டு தடவைகள் குறைக்கப்பட்டிருக்கும்.

வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளை பெற்று அரசாங்கம் நாட்டை நிர்வகிக்கலாம் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!