நெடுங்கேணி பொலிஸாரினால் அச்சுறுத்தப்படும் வெடுக்குநாறி ஆலய பரிபாலன சபையினர்..!

நெடுங்கேணி பொலிஸாரினால் வெடுக்குநாறி ஆலய பரிபாலன சபையினர் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

இன்று காலை ஆலய பூசகர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு 2019ம் ஆண்டு ஏணிப்படி வைத்தது யார்? நிதி வழங்கியது யார்? இதனோடு தொடர்புடையவர்கள் யார்? என்ற பல கேள்விகளோடு அவரை மூன்று மணிநேரத்திற்கு மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.



அதன் பின்னர் இன்று மாலை ஆலய பூசகரின் மனைவியிடம் ஒரு மணிநேரம் விசாரணை செய்துள்ளனர், 2019ஆம் ஆண்டு வீட்டிற்கு ஏணிப்படி கொண்டு வந்தது யார்? வீட்டிலிருந்து ஆலயத்திற்கு கொண்டு சென்றது யார்? போன்ற பல விடயங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை ஆலய பரிபாலன சபையின் போசகர் அழைக்கப்பட்டுள்ளார்,அதனைத் தொடர்ந்து நாளை மதியம், மாலை ஏனைய பரிபாலன சபை உறுப்பினர்கள் அழைக்கப்படவுள்ளனர்,



அதேவேளை இன்று மதியம் சிவபூமி அறக்கட்டளையின் ஆர்.திருமுருகன் ஐயாவிடமும் நெடுங்கேணி பொலிஸார் சென்று ஆலய பரிபாலன சபையினருக்கு புதிதாக வழங்கிய விக்கிரகங்கள் தொடர்பாக இரண்டு மணிநேரம் விசாரணை செய்திருக்கிறார்கள்.

எங்கள் மீதே விசாரணைகள் பல மணிநேரங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இதுவரையான காலப்பகுதியில் ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்த சந்தேக நபர்களையும் நெடுங்கேணி பொலிஸார் கைது செய்யவில்லை, எந்த விசாரணையும் செய்யவில்லை,



மாறாக புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விக்கிரகங்கள் தொடர்பாவும், 2019ஆம் வைக்கப்பட்ட ஏணிப்படி தொடர்பாகவுமே துருவி துருவி பல மணிநேரங்கள் விசாரணை செய்து வருகின்றார்கள். இது வழிபாட்டில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.