15வயதான மாணவியை காணவில்லை; காதலனை தேடும் பொலிஸார்..!

பெந்தோட்டை, சிங்கரூபாகம பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மகள் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் பெந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று(12.05.2023) முறைப்பாடு செய்துள்ளார்.

சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் இளைஞருடன் தனது மகள் காதல் உறவில் இருந்ததாகவும் தாயார் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, கடந்த 10ஆம் திகதி இது குறித்து மகளை எச்சரித்ததாக அவரது தாயார் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி 2 நாட்களாக மகள் பாடசாலைக்கு செல்லவில்லை என தாயார் முறைப்பாட்டின் போது குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மதியம் மற்ற இரு பிள்ளைகளை பாடசாலையில் இருந்து அழைத்து வருவதற்காக வீட்டில் இருந்து சென்று திரும்பிய போது மகள் வீட்டில் இல்லை.தான் இளைஞன் ஒருவருடன் பேருந்தில் ஏறி அத்துருவெல்ல பகுதியில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கியதாக தனது நண்பிக்கு அழைப்பேற்படுத்தி காணாமல் போனதாக கூறப்படும் மாணவி குறிப்பிட்டதாக தாய் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போயுள்ள மாணவி மற்றும் நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞனைக் கண்டுபிடிக்க பெந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த இளைஞன் மற்றும் பாடசாலை மாணவியின் புகைப்படங்கள் மற்றும் ஏனைய தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.