சோமாலியாவில் கோர வெள்ளப்பெருக்கு; வசிப்பிடத்தை விட்டு வெளியேறிய 2 லட்சம் மக்கள்..!

சோமாலியா நாட்டில் ஏற்பட்ட கோர வெள்ள பெருக்கு காரணமாக சுமார் 2 லட்சம் மக்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே ஆபிரிக்க நாடுகளில் கனமழை, வெள்ளம் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் தான் இத்தகைய வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன. இம்மாத தொடக்கத்தில் ருவன்டா நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 135 மக்கள் உயிரிழந்தனர், 9,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.



அதேபோல, மற்றொரு நாடான கொங்கோவின் கிழக்கு பகுதியில் திடீரென்று ஏற்பட்ட கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கின. இந்த வெள்ள பாதிப்பு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், தற்போது சோமாலியாவும் கடுமையான வெள்ள பாதிப்பை கண்டுள்ளது.

கடுமையான வறட்சி பாதிப்பை கண்டுவந்த சோமாலியாவில் தற்போது கடுமையாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஷாபெலே மற்றும் ஜூபா ஆகிய நதிகள் கரைகளை உடைத்து வெள்ள பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்துள்ளது. இதையடுத்து சோமாலியாவின் பல பகுதிகள் வெள்ளாக்காடக காட்சி அளிக்கின்றன.



இந்த திடீர் வெள்ள பெருக்கு காரணமாக 2 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடத்தை வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். மேலும், பல கால்நடைகள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. வேளாண்மையை பெரிதும் நம்பியிருக்கும் இந்த நாடுகளில் சுமார் 1000 ஹெக்டேர் விளைநிலம் நீரில் மூழ்கின.



அதீத பருவநிலை மாற்றம் பிரச்சனையே சோமாலியா போன்ற நாடுகளில் ஏற்படும் பேரிடர்களுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2020க்குப் பின் மட்டும் பேரிடர் காரணமாக சுமார் 14 லட்சம் சோமாலியர்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். 38 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன என புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.