இன்று கரையைக் கடக்கிறது ‘மோக்கா’ புயல்; 190Km வேகத்தில் காற்று வீசும்..!

வங்கக்கடல் – அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் இன்று வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் அதி தீவிர புயலாக மாறியது.

போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 610 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.புயல் கரையை கடக்கும் போது 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தென் கிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.