நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது தொகுதிக்கு மூன்று மாதங்கள் ஓய்வு..!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்ட பாரிய பழுதுபார்ப்பு பராமரிப்பு பணிகளுக்காக குறித்த தொகுதி மூடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.



எனினும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். ஏனைய அனல் மின் நிலையங்களுடன் மின் உற்பத்தி நிர்வகிக்கப்படும்.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்திற்கான 30ஆவது கப்பல் தற்போது இறக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்



அதன்படி, தற்போது இலங்கை மின்சார சபையின் நிலக்கரி தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மின்சார சபை தொழிற்சங்கங்கள் மற்றும் சில ஊடகங்கள் முன்னர் ஊகித்ததைப் போன்று மின்தடைகள் ஏற்படாது என அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.