மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலுக்கு அணிதிரளுமாறு அறிவிப்பு..!

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள், தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அனைதினதும் அன்றாட செயற்பாடுகளை நிறுத்தி நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபடுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் கடந்த 2009 மே 18 ஆம் திகதி மௌனிக்கச் செய்யப்பட்டது.



இந்த இனவழிப்பு யுத்தத்தின்போது சுமார் 150,000 வரையான தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப் படைகளால் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

உரிமைக்காகப் போராடியமைக்காக இவ்வாறு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரவேண்டிய வரலாற்றுக்கடமை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டு.



அத்துடன் அவர்கள் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்து போராடினார்கள் என்பதும், அக்கோரிக்கைகளை இறுதிவரை கைவிட மறுத்து உறுதியாக நின்றமையினாலுமே இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகள் எமது அடுத்த சந்ததிக்குக் கடத்திச் செல்லப்படல் வேண்டும்.



அதனூடாக இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியில் விசாரணையை வலியுறுத்துவதுடன், இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வுகளை நிராகரித்துத் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வை நோக்கி மக்களை அணிதிரட்டிச் செல்வதும் அவசியக் கடமையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.