தமிழரின் உரிமையை பற்றி பேச வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது – சிவஞானம் சிறீதரன்

தமிழர்களுடைய உரிமைகள் தொடர்பில் பேச வேண்டிய பொறுப்பும் கடமையும் எங்களுக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டகச்சி பகுதியில் நேற்று (17-05-2023) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழத்திற்காக போராடுகின்றபோது 1994 மற்றும் 2001 ஆண்டுகளில் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதற்காக அவர்கள் தமிழீழத்தை விட்டு பேசவில்லை.

நாங்கள் ஒரு தனித்துவமான தேசிய அடையாளத்தோடு பேசுகின்றோமே தவிர சலுகைகளை பெறும் நோக்கில் அல்ல.பிரதானமாக தமிழ்த்தரப்போடு இருக்கின்ற பிரச்சினை பேசப்பட்டு அதற்கான தொடக்கம் ஏற்படுத்தப்படுகின்றபோது முஸ்லிம் தரப்புகளும் அந்த பேச்சுகளில் ஈடுபடுவார்கள்.

குறிப்பாக வடக்கு- கிழக்கு இணைப்பு என்று வரும்போது முஸ்லிம்கள் இல்லாத இணைப்பு இருக்காது என்பதில் நாங்கள் திடமாக இருக்கின்றோம்.சர்வதேசம் சொல்கிறது தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று, எனவே தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

எனவே சர்வதேசத்தை ஜனாதிபதி ஏமாற்ற முடியாது ஏமாற்றிய காலமும் மலையேறிவிட்டது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *