சொக்கலேட் கொடுத்து, வெள்ளை வேனில் கடத்தல் முயற்சி; நகைக் கடைக்குள் புகுந்து தப்பித்த மாணவி..!

பிரசித்தி பெற்ற பாடசாலையில் தரம் 6இல் கல்வி பயிலும் 10 வயது சிறுமியான மாணவியை, வானொன்றில் பலவந்தமாக ஏற்றி, கடத்திச் செல்வதற்கு முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக பண்டாவளை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தனர்.

பண்டாரவளை, துஹூல்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, பண்டாரவளை நகரில் பிரசித்தி பெற்ற பாடசாலையில் கல்வி பயிலும் சிறுமியான மாணவியையே இவ்வாறு கடத்திச் செல்வதற்கு முயன்றுள்ளார்.



கடந்த வௌ்ளிக்கிழமை (19) பாடசாலை நிறைவடைந்ததும், பஸ்ஸூக்கு செல்வதற்காக தனியாக நடந்து சென்றுக் கொண்டிருந்த போதே, பாடசாலையில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில், வௌ்ளை வானொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

முகத்துக்கு கறுப்புத் துணியை கண்டியிருந்த இளைஞன் ஒருவர், அந்த வானில் இருந்து இறங்கி, சிறுமியின் அருகில் வந்து, தாய்க்கு சுகமில்லை. அ​வரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். உன்னிடம் இந்த சொக்கலேட்டை கொடுத்து, வானில் ஏற்றிக் கொண்டு வரச்சொன்னார் என்று மாணவியிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

எனினும், தன்னுடைய அம்மா, தனது தம்பி கல்வி பயிலும் பாடசாலைக்குச் செல்வதாக, வியாழக் கிழமை தன்னிடம் தெரிவித்திருந்தமை மாணவிக்கு ஞாபகத்துக்கு வந்துள்ளது.



அதனையடுத்து அருகிலிருந்த படிக்கட்டுகளின் ஊடாக ஓடிச்சென்ற அந்த மாணவி, தனக்குத் தெரிந்த தங்க ஆபரண கடைக்குள் நுழைந்து தப்பித்துக் கொண்டார்.

அதன் பின்னர், தன்னுடைய தாயுடன் வந்தே மாணவி மேற்கண்டவாறு முறைப்பாடு செய்துள்ளார். அந்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



விசேடமாக பாடசாலைகளுக்கு அருகில், நகரில், வீதிகளில் வந்து கொண்டிருக்கும் போது பல்வேறான கதைகளை கூறும், இனந்தெரியாத நபர்களுடன் கதைக்க வேண்டாம் என்றும் அவ்வாறானவர்களால் வழங்கப்படும் சொக்கலேட், டொபி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அத்துடன், அவ்வாறானவர்களால் கொடுக்கப்படும் பானங்களை அருந்தவும் வேண்டாம் என்று பாடசாலை, மாணவிகள் மற்றும் மாணவர்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.