இலங்கையில் இனப் படுகொலை நடந்தது என்று கூறும் கருத்தை நான் ஏற்க மாட்டேன் – சந்திரிக்கா தடாலடி

“கனேடிய பிரதமர் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்று கூறும் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். விசாரணைகள் எதுவுமின்றி இப்படியான சொல்லை கனேடிய பிரதமர் பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது.” என முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அதிபர் சந்திரிக்கா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மே 18 ஐ தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக பிரகடனம் செய்யும் பிரேரணையை நாடாளுமன்றம் கடந்த ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றியது.

இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரதும் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தமாட்டாது என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.இலங்கையில் இறுதிப் போரில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டில் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நீதியான விசாரணை எதுவும் இதுவரை நடைபெறவில்லை, அதனால்தான் பாதிக்கப்பட்ட தரப்பினர் சர்வதேசத்திடம் நீதி வேண்டி நிற்கின்றார்கள்.

இந்தநிலையில், வெளிநாடுகளின் தலைவர்களும், சர்வதேசப் பிரதிநிதிகளும் இலங்கை அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதுடன் நாட்டை அவமானப்படுத்தும் வகையிலான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.ஒரு நீதியான உள்நாட்டு விசாரணை நடத்திருந்தால் வெளியில் இருப்போர் நாட்டையும், அரசையும் இவ்வாறு தூற்றி இருக்க மாட்டார்கள்.

எனினும் கனேடியப் பிரதமர் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்று கூறும் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

விசாரணைகள் எதுவுமின்றி இப்படியான சொல்லை கனேடியப் பிரதமர் பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது.” என தெரிவித்துள்ளார்.