குடும்பம் ஒன்றின் மாத செலவு 76,000 ரூபாவாக அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

குடும்பம் ஒன்றின் மாத செலவு 76 ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. அதில் 53 வீதம் உணவு தேவைக்காக செலவிடப்படுவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அபிவிருத்தியின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அபிவிருத்தியின் 2023 புதிய ஆய்வறிக்கையில் வெளிப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.



இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் இந்த வருடம் குடும்பம் ஒன்றின் மாதச் செலவு 76 ஆயிரத்தி 124 ரூபாவாக அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அபிவிருத்தியின் புதிய அறிக்கை மூலம் வெளிப்பட்டிருக்கிறது. ஆய்வு அறிக்கையின் பிரகாரம் கடந்த வருடம் இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதச் செலவு 63 ஆயிரத்தி 820 ரூபாவாக இருந்தது.

அத்துடன் மாதச் செலவில் நூற்றுக்கு 53 வீதம் அதாவது 40 ஆயிரத்து 632 ரூபா உணவு தேவைக்காக மாத்திரம் செலவிடப்படுவதுடன். எஞ்சிய நூற்றுக்கு 47 வீதம் அதாவது 35 ஆயிரத்து 492 ரூபா உணவு அல்லாத வேறு தேவைகளுக்காக செலவிடப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.



இதேவேளை, இலங்கையில் தனிநபர் ஒருவரின் மாதச் செலவு 13 ஆயிரத்து 777 ரூபா தேவைப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் 2022, 2023 அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வருமானத்தை தேடிக்கொள்ள முடியாதவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என இனங் காணப்படுவர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றின் விலை அதிகரிக்கப்பட்டதனால் நாட்டில் பணவீக்கத்தின் அதிகரிப்பும் கடந்த 3 வருடங்களில் பாரியளவில் அதிகரித்தது.



அதனால் நாட்டின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 14.3 வீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டிருக்கின்றனர் எனவும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.