சரத் வீரசேகரவின் கருத்துக்கள் மிகக் கேவலமானவையாகும் – விக்கி காட்டம்

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், நீதிபதியை அச்சுறுத்தும் விதமாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்,தன்னை ஒரு சிங்கள அபிமானியாகவும், சிங்கள தேசியவாதியாகவும் காண்பித்துக் கொள்ளும் சரத் வீரசேகர கூறுகின்ற கருத்துக்களை தாம் ஏற்றுக் கொள்வதில்லை என்றும், சரித்திரத்தை அறிந்து கொள்ளாமல் ‘இலங்கை சிங்கள பௌத்த நாடு’ என்று அவர் கூறுவது அவரது அறியாமையையே காண்பிக்கிறது என்றும் தெரிவித்தார்.

சரத் வீரசேகரவுக்கு தன்னை ஒரு சண்டியர் போன்று காண்பித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கலாம். ஆனால், மீண்டும் மீண்டும் இலங்கையை சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்ற அவர், முதலில் சரித்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.துட்டகைமுனு சிங்களவர் அல்ல என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரே விடயத்தை நூறு முறை கூறுவதால் அது உண்மையாகி விடாது. அதேபோன்று நீதிபதியை அவமதிக்கும் விதமாக சரத் வீரசேகர கூறியிருக்கும் கருத்துக்கள் மிக மிகக் கேவலமானவையாகும்’ என்றும் விக்னேஸ்வரன் கண்டனம் வெளியிட்டார்.