தமிழ் நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்; நாடாளுமன்றத்தை புறக்கணிக்க தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு..!

குருந்தூர்மலையில் இடம்பெறும் சட்டவிரோத பௌத்த கட்டுமானத்துக்கு எதிரான சட்ட நகர்வுகளை எடுத்த முல்லைத்தீவு நீதிபதி ரி் சரவணராசா அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களால் பதவிவிலக வைக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த அடக்குமுறைக்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் கடுமையான எதிர்வினைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



அத்துடன் தமிழ் தேசியம் சார்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக தமிழ் நீதிபதியொருவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளமை தமிழர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக தமது ஊடக அறிக்கையில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.



அத்துடன் நீதிபதிக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்த தரப்புகள் நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து கட்டமைப்புக்களும் சட்டவாளர்களும் தமது ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பாக தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியாத நாட்டின் சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்தையும் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என நாம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.