அண்ணாமலை ஒரு புண்ணாக்கு; வரலாறு தெரியாம பேசுனா விட மாட்டோம் – அதிமுக முன்னாள் எம்பி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு புண்ணாக்கு என்றும் அதிமுகவின் வரலாறு தெரியாமல் பேசினால் அதிமுகவினர் சும்மா விட மாட்டார்கள் எனவும் அதிமுக முன்னாள் எம்.பி கோ.ஹரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கூட்ரோடு பகுதியில் அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, அதிமுக முன்னாள் எம்.பி கோ.ஹரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.பி கோ.ஹரி,

“மக்களின் ஜீவாதார பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான். காவிரி குடிநீர் பிரச்சனைக்காக 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் போராடி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை குறை கூறுவது என்பது அநாகரிமான செயல்.

அதிமுக தலைவர்கள் பற்றியும் அதன் வரலாற்றுப் பற்றியும் அண்ணாமலைக்கு தெரியுமா? அண்ணாமலை ஒரு புண்ணாக்கு, அவரால் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட ஜெயிக்க முடியாது. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் பாஜக கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு சில இடங்களிலாவது வெற்றி பெற்றது. அதிமுகவின் வரலாறு தெரியாமல் பேசினால் அதிமுகவினர் சும்மா விட மாட்டார்கள்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக – அதிமுக இடையே ‘எதிர்க்கட்சி’ தொடர்பாக உரசல் ஏற்பட்டபோது, 4 தொகுதிகளை வென்ற பாஜக தன்னை எதிர்க்கட்சியாக நினைத்துக் கொண்டுள்ளது. நாங்க எதிர்க்கட்சி இல்லையா? புண்ணாக்கு.. வெறும் 4 எம்.எல்.ஏ. அதுவும், அதிமுக போட்ட பிச்சை, எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சையாலேயே அந்த 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது எனப் பேசி பரபரப்பைக் கிளப்பினார் கோ.ஹரி.

இந்நிலையில், தற்போது மீண்டும் பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாகப் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் எம்.பி. கோ.அரி. பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியறியதை தொடர்ந்து அதிமுகவினர் பாஜக குறித்தும், அதன் மாநில தலைவர் அண்ணாமலை குறித்தும் தொடர்ந்து மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்மையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்து சொல்லுங்கள், மக்களுக்கு இந்த விஷயத்தில் நம் மீது எந்த சந்தேகமும் வரக் கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்கள் கசிந்தன.

இந்தச் சூழலில் தான் பாஜகவையும், அண்ணாமலையையும் பொது மேடைகளில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் அதிமுகவினர். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சைத்தான் என்று பாஜகவை குறிப்பிட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், “பாஜகவை வெட்டி துண்டாக்கி கடலில் மூழ்கடித்துவிட்டோம் என்று பேசினார்.