காசா மருத்துவமனை தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் இல்லை, பாலஸ்தீனே – பிரான்ஸ் உளவுத்துறை பகீர்

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதில் 500க்கும் அதிகமானவர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பில் யார் நடத்தினர் என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கும் நிலையில் தான் பிரான்ஸ் ராணுவ உளவுத்துறை திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதில் தற்போது வரை 471 பேர் பலியாகி இருப்பதை பாலஸ்தீனம் உறுதி செய்துள்ளது.இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த தாக்குதலை இஸ்ரேல் தான் நடத்தி உள்ளதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

ஆனால் அதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பே இந்த தாக்குதலை நடத்திவிட்டு இஸ்ரேல் மீது பழிபோடுகிறது. ஹமாஸ் அமைப்பின் ராக்கெட் திசைமாறி மருத்துவமனை மீது விழுந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.

இந்நிலையில் தான் காசாவில் உள்ள மருத்துவமனை மீது ராக்கெட் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி பிரான்ஸ் ராணுவத்தின் உளவுத்துறை முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. அதாவது காசா மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நடத்தவில்லை. மாறாக அது பாலஸ்தீனியத்தின் ராக்கெட் தான் மருத்துவமனை மீது விழுந்து இருக்க வாய்ப்புள்ளது.இந்த தாக்குதலை பாலஸ்தீனியம் தவறாக நடத்தி உள்ளது. அதாவது இலக்கு மாறியதால் ராக்கெட் மருத்துவமனை மீது விழுந்து இருக்கலாம் என பிரான்ஸ் ராணுவத்தின் உளவுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

பிரான்சை பொறுத்தவரை இது போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடுவது இல்லை. ஆனால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அறிவுரையின் பேரில் காசா மருத்துவமனை தாக்குதலின் பின்னணி குறித்த விஷயத்தை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இஸ்ரேல் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இதனை தான் தெரிவித்து இருந்தார். அதாவது மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் செய்யவில்லை. அதன் பின்னணியில் வேறு டீம் உள்ளதாக அவர் கூறினார். அதோடு அமெரிக்க உளவுத்துறையும் அதைத்தான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தான் தற்போது பிரான்ஸ் ராணுவ உளவுத்துறை பாலஸ்தீனத்தின் ராக்கெட் தான் மருத்துவமனை மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.