அத்துமீறிய குற்றச்சாட்டில் கைதான 37 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல்..!

மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பகுதிகளில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 37 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மன்னார் கடற்பகுதியில் கைதான 23 இந்திய மீனவர்களும் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று பிற்பகல் பிரசன்னப்படுத்தப்பட்டபோதே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை, நெடுந்தீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இன்று ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் பிரசன்னடுத்தப்பட்டபோதே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இதேவேளை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 37 இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, தொடருந்து மறியல் மற்றும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அத்துமீறி இலங்கை கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், 5 படகுகளையும் கைப்பற்றினர்.இந்த நிலையில், குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய கோரியும் எதிர்வரும் வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில் மண்டபம் தொடருந்து நிலையத்திலிருந்து சென்னை நோக்கி புறப்படும் தொடருந்தை மறித்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு குறித்த மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.