ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்குவதில் இழுத்தடிப்பு; சபாநாயகர் உடன் கவனம் செலுத்த வேண்டும் – தயாசிறி கோரிக்கை

வாகன விபத்தொன்று காரணமாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்காவுக்கு சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பிணை பெற்றுக் கொள்ளும் விடயம் இழுத்தடிக்கப்பட்டு வருவதால் அவர் தொடர்ந்தும் சிறையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் இந்த சபையில் அனுமதிக்கப்பட்டு, சபாநாயகராகிய நீங்கள் அதில் கைச்சாத்திட்டிருந்திருந்தீர்கள்.

குறித்த சட்டத்தின் பிரகாரம் இதுவரை காலமும் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஊடாக பிணை பெற்றுக்கொள்ள முடியுமாகி இருந்த நடவடிக்கையை நீதிவான் நீதிமன்றம் ஊடாக பிணை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.அதன் பிரகாரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா பிணை பெற்றுக்கொள்வதற்காக நீதிவான் நீதிமன்ற்ததுக்கு பல தடவைகள் சென்றுள்ளார்.

ஆனால் இந்த பிணையை மேன்முறையீட்டு நீதிமன்றலேயே பெற்றுக் கொள்ள முடியும் என அவருக்கு அங்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்றால் நீதிவான் நீதிமன்றத்துக்கு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்துக்கு நீங்கள் கைச்சாத்திட்ட பின்னர் நீதி அமைச்சர் அதில் கைச்சாத்திடவில்லை என தெரிவித்து, அவர் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.அதேநேரம் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்துக்கு கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்கும் செயற்பாடு அங்குமிங்கும் தள்ளப்பட்டு வருவதால் கடந்த 8 மாதங்களாக அவர் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இது அவரின் மனித உரிமை மீறலாகும். அதனால் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்