ஜயவர்த்தனபுர பல்கலைக் கழக்கத்தில் குழப்பம்; மறு அறிவித்தல் வரை மாணவர்களுக்கு தடை..!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட வளாகத்திற்குள் மாணவர்களை நுழைவது மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக வேந்தர் இன்று வெளியிட்டார்.

அறிவிப்பின்படி, முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகவியல் பீடத்தில் உள்ள அனைத்து ஆண்டு மாணவர்களும் இன்று மாலை 6.30 மணி முதல் பீட வளாகத்திற்குள் மறு அறிவித்தல் வரை நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.



சட்டவிரோத செயற்பாடுகளுக்காக இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் குழுவொன்று வேந்தர் மற்றும் பல விரிவுரையாளர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சமூகவியலின் சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

வேந்தர் மற்றும் விரிவுரையாளர்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கும் போது, மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவை மாற்றுமாறு கட்டாயப்படுத்தினர்.



எனினும் பல்கலைக்கழகத்தின் நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானத்தை மீளப்பெற முடியாது என வேந்தர் கூறியிருந்தார்.

முகாமைத்துவ பீட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிப்பதை இன்று முதல் இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்