அதிபர் ஒருவரின் மோசமான செயல்; மாணவர்கள் இருவர் வைத்திய சாலையில் அனுமதி..!

நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாடசாலை ஒன்றில் உணவு பொதி செய்யும் பொலித்தீனை பாடசாலையின் அதிபரொருவர், உட்கொள்ளுமாறு வற்புறுத்தியமையால், அதனை உட்கொண்ட மாணவர்கள் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பாதிப்புக்குள்ளான மாணவர்கள் இருவரும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் தரம் 11 இல் 33 மாணவர்கள் கல்வி பயில்வதாகவும். இதில் 07 மாணவர்கள் பகல் உணவுகளை உணவு பொதி செய்யும் பொலித்தீனில் சுற்றி கொண்டு வந்துள்ளனர்.



இடைவேளை நேரத்தில் உணவை உட்கொண்ட மாணவர்கள், உணவு கொண்டு வந்த உணவு பொதி செய்யும் பொலித்தீன் மற்றும் செய்தித்தாள் பக்கங்களை தங்களுடைய வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது ​​அவ்விடத்திற்கு வந்த அதிபர் அவற்றை வெளியே எடுத்து, உட்கொள்ளுமாறு வற்புறுத்தி கூறியுள்ளமையினால் மாணவர்கள் அதனை உட்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.



உணவு பொதி செய்யும் பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை உட்கொண்ட ஏழு மாணவர்களில் ஒருவர் நேற்றும்(21) மற்றுமொரு மாணவன் இன்றும்(22) நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெற்றோரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது வயிற்று வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.



சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் தந்தை, நாவலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், அந்தப் பாடசாலையின் அதிபரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அந்த முயற்சி கைகூடவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்